ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையைச் சீனா ஏற்றுக்கொண்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தில் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த மோதலில் ஈரானுக்குச் சீனா ஆயுத உதவிகளை வழங்கி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்குத் தாம் நேரடியாகக் கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்டுள்ள டிரம்ப், அதற்குச் சீனாவிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு இனி ஆயுதங்கள் வழங்கப்படாது என்று ஜி ஜின்பிங் எனக்கு உறுதி அளித்துள்ளார் என டிரம்ப் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக, ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரை கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்திருந்தார். அமெரிக்காவின் இந்தப் பொருளாதார நெருக்கடி மற்றும் டிரம்பின் நேரடித் தலையீடு காரணமாகச் சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. விரைவில் தாம் மேற்கொள்ளவுள்ள சீனப் பயணத்தின் போது, அதிபர் ஜி ஜின்பிங் தன்னை உற்சாகத்துடன் வரவேற்பார் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்குச் சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகைக்கு மற்ற வல்லரசு நாடுகளிடமிருந்து பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லை என்றும், இதனால் வளைகுடா நாடுகள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் டிரம்ப் பெருமிதம் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் ஏற்கனவே நடைபெற்ற நிரந்தர போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தாலும், மீண்டும் பாகிஸ்தானில் வைத்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக டிரம்ப் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சீனாவின் இந்த முடிவால் ஈரான் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. இது போரை முடிவுக்குக் கொண்டு வருமா அல்லது ஈரானை இன்னும் ஆக்ரோஷமடையச் செய்யுமா என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும்.
