2023ஆம் ஆண்டு நவம்பர் 14 முதல் 17ஆம் நாள் வரை, அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்திலும் அவர் பங்கேற்றார்.
அப்போது, அமெரிக்க நட்புறவுக் குழுக்களின் வரவேற்பு விருந்தில் ஷிச்சின்பிங் உரையாற்றுகையில், சீன-அமெரிக்க உறவு பற்றிய கதைகள், பொது மக்களால் எழுதப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார். மேலும், இவ்விரு நாடுகளுக்கு இடையேயான தொடர்பு மற்றும் பரிமாற்றம் பற்றிய பல கதைகள் உண்டு.
2015ஆம் ஆண்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட தகவலை அறிந்து கொண்ட பிறகு, வாஷிங்டன் மாநிலத்தின் டகோமா நகரிலுள்ள லிங்கன் பள்ளி மாணவர்கள், ஷிச்சின்பிங் மற்றும் அவரின் மனைவி பெங்லீயுவானை வரவேற்கும் விதமாக சிறந்த ஓவிய படைப்புகளை ஏற்பாடு செய்தனர்.
இந்த ஓவியங்களில், பாண்டா கரடி உள்ளிட்ட சீனாவின் பண்பாட்டு சின்னங்களும், வூட்சக் போன்ற வாஷிங்டன் மாநிலத்தின் தனிச்சிறப்பு சின்னங்களும் இடம்பெற்றன. சீன-அமெரிக்க நட்புறவு நீண்டகாலமாக நீடிப்பதிலும், நல்ல எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்குவதிலும் லிங்கன் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பை இந்த ஓவியங்கள் எடுத்துக்காட்டின.
ஷிச்சின்பிங்கிற்கும் லிங்கன் பள்ளிக்கும் இடையேயான கதை, 1993ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஃபுச்சோ மாநகருக்கான குழுச் செயலாளராக பதவியேற்றிருந்த அவர் அந்த ஆண்டில் டகோமா நகரில் பயணம் மேற்கொண்டு, லிங்கன் பள்ளியினைப் பார்வையிட்டார்.
2015ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் நாள், அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட ஷிச்சின்பிங் மீண்டும் இந்த பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைச் சந்தித்தார். அந்த பயணத்தில், மேசைபந்து உபகரணங்களை பரிசாக வழங்கியதோடு, சீன-அமெரிக்க உறவில் மேசைபந்து ஆற்றியுள்ள முக்கிய பங்களிப்பை எடுத்துக் கூறினார். மேலும், 100 மாணவர்கள் சீனாவில் பயணம் செய்யுமாறு ஷிச்சின்பிங் அழைப்பு விடுத்தார்.
ஓராண்டுக்குப் பிறகு, லிங்கன் பள்ளியைச் சேர்ந்த குழு சீனாவிற்கு வருகை தந்துள்ளது. இப்பயணத்தில் ஓர் உண்மையான சீனாவை அவர்கள் பார்த்ததோடு சீனா பற்றி அருமையான நினைவுகளும் அவர்களின் மனதில் ஆழப்பதிந்தன.
2021ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியின் வேந்தர் பேட்ரிக் எர்வேன் ஷிச்சின்பிங்கிற்கு எழுதிய கடிதத்தில், 2016ஆம் ஆண்டு எனது பள்ளியைச் சேர்ந்த 100 மாணவர்கள் உங்களின் அழைப்பின் பெயரில் சீனாவில் பயணம் மேற்கொண்டனர். இந்தப் பயணம், அவர்களின் சிறந்த கல்வி அனுபவமாகும். சீனாவின் அதிசயம், அவர்களின் அறிவை அதிகரித்துள்ளது. மாணவர்கள் பரிமாற்றம் மற்றும் கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம், இரு நாட்டு மக்களுக்கு உரிய முன்மாதிரியை உருவாக்குவோம் என்று கூறினார்.
நடப்புப் பயணத்தில், அமெரிக்க மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையேயான பரிமாற்றங்களை அதிகரிக்கும் வகையில், எதிர்வரும் 5 ஆண்டுகளில் அமெரிக்காவின் 50 ஆயிரம் இளைஞர்கள் சீனாவிற்கு வருகை தரும் ஒரு பரிமாற்றத் திட்டத்தை ஷிச்சின்பிங் அறிவித்தார்.