தமிழ்நாடு வறட்சி மண்டலமாக மாறும் அபாயம்… தென்னிந்தியாவை உலுக்கி எடுத்த ரிப்போர்ட்…! 

Estimated read time 1 min read

எதிர்காலத்தில் தமிழகத்திற்குப் பெரிய அளவிலான வறட்சி ஆபத்து காத்திருப்பதாக வெளிவந்துள்ள ஆய்வு அறிக்கை ஒன்று, மக்களையும் அரசையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

‘இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் கிளைமட்டாலஜி’ என்ற சர்வதேச ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ‘திருத்தப்பட்ட இந்திய பருவநிலை தீவிரக் குறியீடு’ குறித்த ஆய்வில், நாட்டின் முக்கியக் காலநிலை மண்டலங்களில் ஒன்றான தென்னிந்தியாவில் வறட்சியின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து வருவதாகக் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேசிய மத்திய கால வானிலை முன்னறிவிப்பு மையம், இந்திய வானிலை ஆய்வு துறை மற்றும் அத்ரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த காலநிலை விஞ்ஞானிகள் இணைந்து 1971 முதல் 2022 வரையிலான சுமார் 50 ஆண்டுகால மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலைத் தரவுகளை மிகத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன. தென்னிந்தியாவில் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளின் அளவு 2000-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக வேகமாகக் கூடிக்கொண்டே செல்கிறது. சில குறிப்பிட்ட ஆண்டுகளில், தென்னகத்தின் 40 சதவீதத்திற்கும் அதிகமான நிலப்பரப்பு கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துள்ளது.

“கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட பெரும்பாலான இயற்கை பேரழிவுகளை விடவும் தென்னிந்தியாவில் ஏற்பட்ட வறட்சியின் தாக்கம் மிகவும் கொடுமையானதாக இருந்துள்ளது” என்று இந்த ஆய்வின் முன்னணி விஞ்ஞானி தோட்டா மோகன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், “இந்தியாவிலேயே வறட்சியின் மிக தீவிரமான அறிகுறி தென்னிந்தியாவில்தான் தெரிகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டை உள்ளடக்கிய கிழக்குக் கடலோரப் பகுதி, நாட்டின் மிகக் கடுமையான வறட்சிப் பகுதியாக மாறும் அபாயத்தில் உள்ளது” என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் எம். ராஜீவன் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், வடகிழக்குப் பருவமழை பொய்க்கும் போதெல்லாம் மாநிலம் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறது என்பதற்கு 2016-ஆம் ஆண்டே சாட்சி. அப்போது இயல்பை விட 62 சதவீதம் மழை குறைந்ததால், மாநிலத்தில் இருந்த 32 மாவட்டங்களும், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டன.

தற்போது ‘எல் நினோ’ நிகழ்வு குறித்த தமிழக அரசின் மதிப்பீடும் இதே அச்சத்தைத்தான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. வரும் 2027-ஆம் ஆண்டு வரை வறட்சி, கடுமையான தண்ணீர் பற்றாக்குறை மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து குறைவது போன்ற அபாயங்கள் தொடர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சவாலை எதிர்கொள்ளத் தமிழக அரசுக்கு நிபுணர்கள் குழு முக்கியப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதிகத் தண்ணீர் தேவைப்படும் பயிர்களுக்குப் பதிலாக, குறைந்த தண்ணீரில் குறுகிய காலத்தில் விளையக்கூடிய, வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும் பயிர் வகைகளை விவசாயிகள் பயிரிட வேண்டும் என்றும், இதற்கு அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இயற்கை விடுத்துள்ள இந்த எச்சரிக்கையை உணர்ந்து, நீர் மேலாண்மையிலும் விவசாய முறைகளிலும் நாம் உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்!

You May Also Like

More From Author