ரூபாய் மதிப்பு சரிவுக்கான முக்கிய காரணம்; நிர்மலா சீதாராமன் விவரிக்கும் சிறப்பு தொகுப்பு

Estimated read time 1 min read

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களுக்கும், அதன் மீதான அழுத்தத்திற்கும் உலகளாவிய வெளிப்புற சவால்களே முக்கியக் காரணம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான சூழலிலும் பிற நாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மிகவும் நிலையானதாகவே செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

.டெல்லியில் முதல்முறையாக புளூம்பெர்க் நடத்திய சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசு நிதிக்கட்டுப்பாட்டை முறையாகப் பின்பற்றி வருவதால், முதலீட்டாளர்கள் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவு பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

எண்ணெய் நிறுவனங்களுக்கான டாலர் தேவையை நிவர்த்தி செய்ய ரிசர்வ் வங்கி சிறப்புச் சலுகைகளை வழங்கியதோடு, அந்நியச் செலாவணி வழித்தோன்றல் வர்த்தக விதிகளையும் (Forex Derivatives) கடுமையாக்கியது. இந்த அதிரடி நடவடிக்கைகளால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மீண்டு வரத் தொடங்கியுள்ளது

மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில் ரூபாய்க்கு ஆதரவளிக்கும் வகையில், டாலர்களை ஈர்ப்பதற்காக மத்திய அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் கடந்த ஜூன் மாதம் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.

அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான இணக்கச் சுமையைக் குறைக்கும் பொருட்டு மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு இந்தியப் புலம்பெயர்ந்தோரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், ஒரு மாதம் முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்ட இறுதித் தேதியான ஆகஸ்ட் 31 வரை FCNR(B) வைப்புத் திட்டத்தின் கீழ் வங்கிகள் 133 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்டியுள்ளன என்றும் கூறியுள்ளார்.

தனியார் துறை முதலீடு குறித்துப் பேசிய சீதாராமன், “உள்நாட்டு தனியார் மூலதனம் இந்தியாவிற்குள் வந்துகொண்டிருப்பதாகவும், அதே நேரத்தில் நாடு வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்த்து வருவருவதாகவும் நிர்மலா சீத்தாராமன் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், இந்தியாவின் வலுவான கொள்கை வடிவமைப்பு காரணமாக அந்நிய நேரடி முதலீடு (FDI) மற்றும் உள்நாட்டுத் தனியார் முதலீடுகள் கணிசமாக அதிகரித்துள்ளன என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக செமிகண்டக்டர் (குறைக்கடத்திகள்), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy), மருந்துத் துறை (Pharma) மற்றும் விமான போக்குவரத்து (Aviation) ஆகிய துறைகளில் தனியார் முதலீடுகள் புத்துயிர் பெற்று வருகின்றன என்று கூறியுள்ளார்.

உள்கட்டமைப்பு மேம்பாடுகள், ஒழுங்குமுறை செயல்முறைகள் மற்றும் நாட்டின் விரிவடைந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றால் இந்தியாவின் முதலீட்டு ஈர்ப்பு அதிகரித்துள்ளதாக கூறியுள்ள நிர்மலா சீதாராமன், இந்தியாவின் பெரிய உள்நாட்டுச் சந்தையும், வளர்ந்து வரும் வாங்கும் சக்தியும், நிறுவனங்களுக்கு உள்நாட்டு நுகர்வு மற்றும் ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்ய ஒரு வாய்ப்பை வழங்குகின்றன என்றும் கூறியுள்ளார்.

முதலீட்டை ஈர்ப்பது சவாலின் ஒரு பகுதி மட்டுமே என்று கூறியுள்ள நிர்மலா சீதாராமன், மூலதனம் நாட்டிலேயே தங்கி, உற்பத்தித் துறைகளுக்குள் பாய்வதை ஊக்குவிக்கும் சூழல்களையும் உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முதலீட்டாளர்கள் பெருகிய முறையில் அமெரிக்காவையும் செயற்கை நுண்ணறிவு வாய்ப்புகளையும் நோக்கிப் பார்ப்பதால், இந்தியா தனது சொந்த வளர்ந்து வரும் தொழில்நுட்பச் சூழலுக்குள் நிதியை ஈர்ப்பது முக்கியம் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பயோசிமிலர்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் விமானப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் முழுமையான சீரமைப்பு வசதிகள் குறைக்கடத்தி உற்பத்தி மற்றும் வடிவமைப்பு, சிப் சோதனை மற்றும் பேக்கேஜிங், பசுமை ஹைட்ரஜன், பசுமை அம்மோனியா மற்றும் மின்சார வாகனங்கள் ஆகியவை முதலீட்டை ஈர்க்கக்கூடிய துறைகள் என்று அடையாளம் காட்டியுள்ள நிர்மலா சீதாராமன், தனது தரவு மையத் திறனை விரிவுபடுத்தும்போது, செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்புக்கு கணிசமான மின்சாரம் தேவைப்படும் என்றும், எனவே நிலையான மின்சாரத்திற்கான செயல் திட்டமும் முக்கியமாக உள்ளன என்றும் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author