ரஷ்ய இசைநிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அரங்கம் ஒன்றில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு அதிரடியாக நுழைந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் ஒன்று தாக்குதலில் ஈடுபட்டது. இதில் சுமார் 60 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த கொடூர தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், மாஸ்கோவில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய அரசாங்கத்திற்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா துணை நிற்கும் என கூறியுள்ள பிரதமர், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் கூறியுள்ளார்.