தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 8,000 கள உதவியாளர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்குத் தமிழக அரசு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
மின் வாரியத்தில் காலியாக உள்ள இந்தப் பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மின் வாரியத் தலைவர் தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தைப் பரிசீலித்த அரசு, தற்போது இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
இந்த 8,000 பணியிடங்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நேரடி நியமன முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதனால் அரசு வேலைக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்தப் பணியிடங்கள் ஒரே நேரத்தில் நிரப்பப்படாமல் இரண்டு கட்டங்களாகத் தேர்வு செய்யப்பட உள்ளன. அதன்படி முதல் கட்டமாக 2027ஆம் ஆண்டில் 5,000 பேரும், இரண்டாம் கட்டமாக 2028ஆம் ஆண்டில் 3,000 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக மின் வாரிய வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் தேர்வர்களிடையே அரசின் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியையும் பெரும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
