காதலுக்கு கேரண்டி தரும் சீன டேட்டிங் செயலி…!

Estimated read time 1 min read

சீனாவில் திருமண விகிதம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இளைஞர்களைத் திருமண உறவுக்குள் கொண்டுவர வித்தியாசமான சலுகையுடன் களமிறங்கியுள்ளது ஒரு டேட்டிங் செயலி. இந்தச் செயலியில் உறுப்பினராகச் சேர்ந்து, மூன்று ஆண்டுகளுக்குள் திருமணம் நடைபெறாவிட்டால் செலுத்திய முழுக் கட்டணத்தையும் திருப்பித் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூதன அறிவிப்பு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஷென்சென் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘லியாங்பெய் ஏஐ’ என்ற செயலிதான் இந்தச் சலுகையை அறிவித்துள்ளது. இதில் உறுப்பினராகச் சேர 2,000 சீன யுவான் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.28,155 ஆகும். இந்தத் தொகையைச் செலுத்தியவர்கள், மூன்று ஆண்டுகளுக்குள் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இந்தச் செயலியின் மற்றொரு சிறப்பம்சம், ஒரே நேரத்தில் பலருடன் பேச முடியாது என்பதுதான். ஒருவர் ஒரு நேரத்தில் ஒரே ஒரு நபருடன் மட்டுமே தொடர்பில் இருக்க முடியும். அந்தத் தொடர்பு முடிவுக்கு வந்த பிறகுதான் அடுத்த நபரைத் தேட முடியும். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சுமார் 20 நிமிடங்கள் பயனர்களிடம் உரையாடி, அவர்களின் குடும்பப் பின்னணி, எதிர்காலத் திட்டங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அறிந்து பொருத்தமான துணையைப் பரிந்துரைக்கிறது.

திருமணமானவர்கள் தவறான தகவல்களுடன் இதில் இணையாமல் இருக்க, உண்மையான பெயர், புகைப்படம் மற்றும் திருமணமாகாதவர் என்பதற்கான சான்றுகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. 150 தம்பதிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் நிறுவனத்தின் நிறுவனர் ஜெங் சின்சுன் இந்தத் திட்டத்தை வடிவமைத்துள்ளார். 2026 ஜூலையில் தொடங்கப்பட்ட இந்தச் செயலி, சீனாவின் 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் பயன்பாட்டில் உள்ளது. மூன்று ஆண்டு பணம் திரும்பப் பெறும் உத்தரவாதத்தின் முதல் சோதனை 2029 ஜூலையில்தான் நடைபெற உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author