அமெரிக்காவின் சிலிகான் வேலி பகுதியில், பள்ளிகளில் தங்களது குழந்தைகளுக்குக் குறைந்த மதிப்பெண் அல்லது கிரேடு கிடைத்தால், பெற்றோர்கள் நேரடியாகப் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு தொடரும் விசித்திரமான போக்கு அதிகரித்து வருகிறது. முன்பு குழந்தைகள் குறைந்த கிரேடு எடுத்தால் அவர்களுக்கு அறிவுரை கூறிப் படிக்க வைக்கும் பெற்றோர்கள், இப்போது ஆசிரியர்களின் மதிப்பீடுகளையும் அறிக்கைகளையும் எதிர்த்து நீதிமன்ற படிகளை ஏறத் தொடங்கியுள்ளனர்.
கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோ பகுதியில், 3-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனின் அறிக்கையில் “மற்றவர்களுடன் சேர்ந்து செயல்படும் திறனை வளர்க்க வேண்டும்” என்று ஆசிரியர் குறிப்பிட்டதற்காக, அந்த அம்மா பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். விளையாட்டு மைதானத்தில் சக மாணவன் நக்கலடித்த போது அந்தச் சிறுவன் உதைத்த சம்பவத்தைக் குறிப்பிட்டே ஆசிரியர் அவ்வாறு எழுதியிருந்தார். ஆனால், இதனை ஏற்க மறுத்து அந்தத் தாய் சட்டப்போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
மற்றொரு சம்பவத்தில், 10-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையை செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உதவியுடன் எழுதப்பட்டதாகக் கூறி ஆசிரியர் குறைந்த கிரேடு வழங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவனின் தந்தை, தனது மகன் சொந்தமாகத்தான் கட்டுரையை எழுதினான் என்பதை நிரூபிக்க 1,162 பக்கங்கள் கொண்ட ஆதாரத்தைச் சமர்ப்பித்து, பள்ளிக்கு எதிராகக் கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், AI கண்டறியும் மென்பொருள்கள் தாய்மொழி ஆங்கிலம் இல்லாத மாணவர்களிடம் பாரபட்சமாகச் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 2024-இல் நடத்தப்பட்ட ஆய்வில், 10-இல் 4 ஆசிரியர்கள் தங்களது மாணவர்களின் கிரேடுகளை மாற்றக் கோரி பெற்றோர்களிடமிருந்து கடுமையான அழுத்தத்தைச் சந்திப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்களே ஆசிரியர்களுக்கு இத்தகைய அழுத்தங்களைத் தருவதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவங்கள் அமெரிக்காவில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் இடையே பெரும் சவாலையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
