கடந்த 1975ல், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலை பிரகடனம் ஒரு தவறான முடிவு’ என, காங்கிரசின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவருமான சோனியா தெரிவித்துள்ளார்.
காங்கிரசின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சோனியா, பிலாங்கிங் எ ஜர்னி ஆஃப் லவ் என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். மொத்தம் 544 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்தை, ஹார்பர்காலின்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
இதில், சோனியாவின் குழந்தை பருவம், இளமை பருவ காதல், படிப்பு, கணவர் ராஜிவ் படுகொலை, அரசியல் வருகை என தன் வாழ்க்கை அனுபவங்களை தெரிவித்துள்ளார். முன்னதாக, சுயசரிதை புத்தகம் குறித்தும், அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் குறித்தும், பிரிட்டனைச் சேர்ந்த ஆங்கில பத்திரிகைக்கு சோனியா பேட்டி அளித்திருந்தார்.
அதில் நாட்டில், கடந்த 1975ல் அவசர நிலையை காங்கிரசை சேர்ந்த அப்போதைய பிரதமர் இந்திரா அமல்படுத்தினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர்கள், செய்தியாளர்கள் விசாரணையின்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரசை விமர்சித்து செய்தி வெளியிடுவது தடை செய்யப்பட்டது. 1977ல் இந்த நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது. இந்த அவசர நிலை பிரகடனம் என்பது தவறான முடிவு என்றும் அமல்படுத்திய இந்திராவும் இதை பிற்காலத்தில் உணர்ந்திருப்பார் என நம்புவதாகவும் சோனியா காந்தி தெரிவித்தார்.
