நொய்டா மெட்ரோ விரிவாக்கம், ரபி பருவ உரத்துக்கு 62 ஆயிரத்து 370 கோடி ரூபாய் உர மானியம் உட்பட 5 திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பேட்டியளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்தியாவின் பண்பாடு மற்றும் பாரம்பரிய சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில், 3 ஆயிரத்து 230 கோடி ரூபாயில், யுகே யுகீன் பாரத் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவை இணைக்கும் வகையில், எட்டு புள்ளி ஐந்து கிலோமீட்டர் நீளமுள்ள மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார்.
மேலும், ரபி பருவ பயிர் சாகுபடிக்காக, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 62 ஆயிரத்து 370 கோடி ரூபாய் உர மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தொழில்முனைவோராக உருவாக விரும்பும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உத்தரவாத நிதியம் உருவாக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.
ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தின்கீழ், எஸ்.சி, எஸ்.டி.
சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் தொழில் தொடங்குவதற்காக 4 ஆயிரத்து 111 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உத்தரவாத நிதியம் உருவாக்கப்பட உள்ளதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
