தைப் பிறந்தும் தையல்களோடு.

Estimated read time 0 min read

Web team

IMG-20240430-WA0024.jpg

தை பிறந்தும் தையல்களோடு !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

நூல் ஆசிரியர் : கவிஞர் கதிர்பாரதி

வெளியீடு : பன்மொழி பதிப்பகம், 117, பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பெங்களூர் சாலை, கிருஷ்ணகிரி – 635 001.

பக்கம் : 108, விலை : ரூ. 100.

******

நூலாசிரியர் கவிஞர் கதிர் பாரதி தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் படைப்பாளி. தேவார இசை ஆசிரியர் ஓதுவார் மூர்த்தி பன்முக ஆற்றல் மிக்கவர். ‘புலிக்குப் பிறந்தது பூனையாகாது’ என்ற பழமொழிக்கு ஏற்ப அவரது மகன் சிறுவன் க. கவிவேலன் ஓவியம் வரைய ஊக்கம் தந்து வளர்த்து பாராட்டும், பரிசும் பெற வைத்து அவனது ஓவியங்களை நூலிலும் இடம்பெறச் செய்து அவனது பிறந்த நாளில் இந்த நூலை வெளியிட்டுள்ளார். பாராட்டுக்கள்.

முனைவர் அ. பழமொழி பாலன் அவர்கள் நீலா நிலா ஆசிரியரர் செண்பகராமன் அவர்கள் இருவரின் அணிந்துரையும் மிக நன்று.நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக உள்ளன

நூலில் உள்ள ஓவியங்கள் அனைத்தும் சிறுவன் க. கவிவேலன் வரைந்தது தான். ஆனால் புகழ்பெற்ற பிரபல ஓவியர்கள் வரைந்த நவீன ஓவியம் போல உள்ளன. பாராட்டுக்கள்.

தொந்தியாய் பெருத்தது
நந்தியாய் நின்றது
தடைகள்!

தடைகள் பல வந்தபோதும் தகர்த்து முன்னேற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக வடித்த ஹைக்கூ நன்று.

பரவி கிடக்கிறது
இலவசமாய கிடைக்கும்
ஆலோசனைகள்!

நம் நாட்டில் கிடைக்கும் இலவசங்களில் ஒன்று ஆலோசனை. சிலர் ஆலோசனை என்ற பெயரில் கதாகாலாட்சேபம் செய்வது உண்டு. இன்றைய இளைய தலைமுறையோ இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடுகின்றனர். அடிக்கடி சொல்லும், அதிகம் சொல்லும் ஆலோசனைகள் மதிப்பிழந்து விடுகின்றன.

கொடுத்தது கேட்கப் பகை!
யாராயினும்
கடன்!

கடன் என்பது அன்பை முறிக்கும், வம்பை வளர்க்கும் என்பது முற்றிலும் உண்மை. நட்பையும் முறிக்கும். நண்பர்களிடம் கடன் வாங்கவோ, கொடுக்கவோ செய்யாமல் இருப்பது சிறப்பு.

தீதும் நன்றும்
நம் கையில்
கையில் உலாபேசி!

தீ என்பது தீபமாகவும் இருக்கும், வெளிச்சம் தரும். அதே தீ எரிக்கவும் உதவும், அதுபோலவே அலைபேசி என்ற தீயை நாமும் தீபம் போல பயன்படுத்தி அறிவொளி பெறலாம். நல்லதிற்கு மட்டுமே அலைபேசியை பயன்படுத்திட வேண்டும்.

தோண்டத் தோண்ட வரும் நீர் போல
படிக்கப் படிக்க வளரும்
அறிவு!

உண்மை தான். படிக்க படிக்க அறிவு வளரும். வளர்ந்த அறிவு பயனுள்ள அறிவு சார்ந்த ஒழுக்கமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

தேக்கம் செய்தால்
ஊக்கம் பெறலாம்
மழை நீர்!

மழைநீர் சேகரிப்பை சொற்சிக்கனத்துடன் உணர்த்தியது சிறப்பு. மழைநீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு நம் மக்களிடம் இன்னும் வரவில்லை. மழைநீர் விரயமாகியே வருகின்றது. சேமிக்க முன்வர வேண்டும்.

தோற்றுப் போனேன்
குழந்தையிடன்
அலிபாவாவானது பொம்மைகள்!

குழந்தைகளிடம் விளையாடி நாமாக தோற்பது போல நடிப்பதும் ஒரு சுகம் தான். கவலை காணாமல் போகும், இன்பம் பிறக்கும் என்பது உண்மை.

ஊரான் வளர்த்த
உலகறிந்த பிள்ளை
பழமொழி!

உண்மை தான். ஊர்மக்கள் பலரும் உதாரணம் காட்டி, மேற்கோள் காட்டி பேசிய பழமொழிகள் காலம் காலமாக இன்றும் தொடர்கின்றது. பழமொழிகள் அருமையான வாழ்வியல் கருத்துக்களை உணர்த்துகின்றன.

எழுத்து சீர்களற்ற பேச்சு
எப்போதும் இனிமை
மழலை மொழி!

குழந்தை பேசும் பேச்சில் பிழை இருந்தாலும் இனிமை இருக்கும். மழலைகளின் பேச்சைக் கேட்பதே இன்பம், தனிச்சுவை இருக்கும் .

மாசிலா தெய்வம்
மாபெரும் தவம்
குழந்தை!

குழந்தையின் மேன்மையை, உண்மையை பல ஹைக்கூ கவிதையின் மூலம் உணர்த்தி உள்ளார்.

புத்தாண்டு பிறந்தும்
புன்னகையில்லை யார்க்கும்
புதிய நோட்டு சில்லரை தட்டுப்பாடு!

உண்மை தான். பணத்தட்டுப்பாடு இன்னும் தீர்ந்தபாடில்லை. ஒரே நாள் இரவில் துக்ளக் ஆட்சி போல 500,1000 பணம் செல்லாது என்று அறிவித்து, மக்கள் பலர் மாண்டனர். கருப்புப்பணத்தை பிடிப்பதாகச் சொல்லி, மக்கள் பணத்தை வங்கியில் செலுத்திட வைத்து, வங்கிப் பணத்தி மல்லையா நீரத்மோடி போன்ற திருடர்களுக்கு வழங்கி விட்டனர். நிர்வாக திறமையின்மைக்கு எடுத்துக்காட்டுகளே இந்நிகழ்வுகள்.

புறக்குப்பைகள் தீயில்
அகக்குப்பைகள் அப்படியே கிடந்தது
அழுகிய எண்ணங்கள்!

மனதை சுத்தமாக, கெட்ட எண்ணங்கள் இன்றி வைத்துக் கொண்டால், மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம் என்றனர். நாட்டில் நடக்கும் அவலங்கள் அனைத்திற்கும் மூல காரணம் மனத்தூய்மை இல்லாத மன அழுக்கே ஆகும்.

சிந்திக்க வைக்கும் விதமாக ஹைக்கூ கவிதைகள் எழுதிய நூலாசிரியர் கவிஞர் கதிர்பாரதிக்கும், நவீன ஓவியங்கள் வரைந்துள்ள சிறுவன் செல்வன் க. கவிவேலனுக்கும் பாராட்டுக்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நூலில் ஹைக்கூவும் ஓவியங்களும் உள்ளன.

குறிப்பு : சில ஹைக்கூ கவிதைகள் இரண்டு முறை வந்துள்ளன. அடுத்த பதிப்பில் நீக்கிடுங்கள்.

.

Please follow and like us:

You May Also Like

More From Author