உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்திக்கு வரும் 30-ம் தேதி செல்லும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 15 கி.மீ. தூரத்துக்கு ரோடு ஷோ நடத்துவதோடு, பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில், புதிதாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷோகம் 2024 ஜனவரி மாதம் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, ஜனவரி 1-ம் தேதி முதல் ஸ்ரீராமர் கோவில் கொண்டாட்டத்திற்கான பிரச்சாரத்தை மேற்கொள்ள பா.ஜ.க. முடிவு செய்திருக்கிறது.
அந்த வகையில், ஸ்ரீராமர் கோவிலுக்கான தியா மின்னல் நிகழ்ச்சியில் 10 கோடி குடும்பங்களை திரட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பா.ஜ.க.வினர் வீடு வீடாகச் சென்று மக்களை ஊக்குவித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோவிலுக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டுப் பக்தர்களும் எளிதில் வந்துசெல்லும் வகையில், புதிய விமான நிலையம் மற்றும் இரயில் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றை வரும் 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து, விமான நிலையம் முதல் இரயில் நிலையம் வரையிலான 15 கி.மீ. தூரத்திற்கு அயோத்தி நகரத்தில் ரோடு ஷோவை பிரதமர் மோடி நடத்துகிறார். பின்னர், அங்கு நடைபெறும் பொதுகூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகிறார்.