சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் தோன்றிய முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக இருப்பது திருச்செந்தூராகும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் சிறப்புக்களைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
முருகு எனும் பேரழகு சிறப்பு பாடல்
தமிழகத்தில் முருகப் பெருமானுக்குப் பல திருத்தலங்கள் இருந்தாலும்,குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக விளங்கினாலும், ஆறு திருத்தலங்கள் முருகனின் படைவீடுகளாகப் போற்றப் படுகின்றன.
போருக்குச் செல்லும் சேனாதிபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் “படைவீடு’ எனப்படும். அந்தவகையில், சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, முருகப்பெருமான், தம் படைகளுடன் தங்கியிருந்த இடமே திருச்செந்தூர் ஆகும். வரிசைப்படி, இது இரண்டாவது படைவீடு என்றாலும், வரலாற்றுப் படி, இதுதான் முதல் படைவீடாக விளங்குகிறது.
தமிழகத்தில் முதன் முதலில் நாகரீகம் தோன்றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருச்செந்தூர் திருக்கோயில் நிலை பெற்று இருப்பதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால்,‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்படும் இவ்வூர், வெற்றி நகர், வியாழ ஷேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டினம், என்றும் அழைக்கப் படுகிறது.
கடலோரத்தில் இருந்தாலும், திருச்செந்தூரும் மலைக்கோயிலே ஆகும். இக்கோயில் கடற்கரையில் இருக்கும் “சந்தனமலை’யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, “கந்தமாதன பர்வதம்’ என அழைக்கப்படுகிறது.
சூரசம்ஹாரம் செய்து, வெற்றி பெற்று சூரனை ஆட்கொண்டதால், முருகப் பெருமான் “ஜெயந்திநாதர்’ என போற்றப் படுகிறார். திருத்தலமும் “திருஜெயந்திபுரம்’ என்று அழைக்கப் பட்டது. காலப்போக்கில் “செந்தில்நாதர்’ என மருவி, இக்கோயிலும் “திருச்செந்தூர்’ என அழைக்கப்படுகிறது.
ஓம் என்னும் வடிவில் அமைந்துள்ள இக்கோயிலின் ராஜ கோபுரம் 157அடி உயரமானது. ராஜகோபுரத்தின் உச்சியின் மேற்புறம் 49 அடி நீளமும், 20 அடி அகலம் கொண்டதாக விளங்குகிறது.
9 தளங்களைக் கொண்ட இக்கோபுரத்தின் உச்சியில் 9 கலசங்கள் உள்ளன.120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்ட இத்திருக்கோயிலில்,சண்முக விலாச மண்டபம்,ஆனந்த விலாசம்,சஷ்டி மண்டபம்,சீபிலி மண்டபம், திருக்கல்யாண மண்டபம்,வசந்த மண்டபம், வேள்விக்கூடம், கலையரங்கம், 124 தூண்களுடன் பிரமாண்டமாக உள்ளது.
கடற்கரை மட்டமும் இக்கோயில் மூலவர் வீற்றிருக்கும் கருவறை மட்டமும் ஒரே அளவாக இருந்தாலும், கடல் நீர் இக்கோயிலின் உள்ளே புகாதவாறு ஞான நுட்பத்துடன் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
முருகப் பெருமான், இருவேறுவடிவங்களில் இக்கோயிலில் எழுந்தருளி இருப்பதே இக்கோயிலின் சிறப்பாகும். கிழக்கு நோக்கி,பாலசுப்பிரமணிய சுவாமியாகவும், தெற்கு நோக்கி சண்முகராகவும் அருள் பாலிக்கிறார்.
சூரனை சம்ஹாரம் செய்தருளிய முருகப் பெருமான், வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபூஜை செய்தார். அந்த அருட்கோலத்திலேயே, வலது கையில் தாமரை மலருடன், சிவயோகி போலச் சிரசில் ஜடாமகுடம் தரித்து,ஒரு திருமுகமும் நான்கு கரங்களும் கொண்ட, கடற்கரை ஆண்டியாகப் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்.
நான்கடி உயரமுள்ள மூலவர் முருகப்பெருமான், மேல் வலக்கையில் சக்தி கொடுத்த வேலும், கீழ் வலக்கையில் வரத முத்திரையும், மேல் இடக்கையில் ஜெபமாலையும் ஏந்தி, கீழ் இடக் கையை இடையில் வைத்த நிலையில் காட்சி அளிக்கிறார்.
சுவாமிக்கு இடப்புறத்தில் உள்ள மாடக் குழியில்,ஜெகந்நாதர், சிறிய சிவலிங்கமாக காட்சி அளிக்கிறார். இந்த ஜெகந்நாதரை வழிபடும் நிலையிலேயே மூலவர் அமைக்கப் பட்டுள்ளார். ஜெகந்நாதருக்குப் பூஜை நடந்த பிறகே, பாலசுப்பிரமணிய சுவாமிக்குப் பூஜை நடக்கிறது. இதேபோல், மூலவருக்ககுப் பின்புறச் சுவரில் வலப்புறம் கஜலக்ஷ்மி காட்சி அளிக்கிறார். இந்த மூலவர் திருமேனி கி.பி.1909 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதாகும்.
மேலும் மூலவர் சன்னதிக்கு வலது பக்கத்தில் “பஞ்சலிங்க’ சன்னதி உள்ளது. இந்த சிவலிங்கங்களை ஆண்டுதோறும், மார்கழி மாதத்தில் தேவர்கள் வந்து வழிபடுவதாகக் கூறப்படுகிறது. முருகப் பெருமான் சிவபூஜை தவம் கலைந்து விடக் கூடாது என்பதற்காக, சுவாமிக்குப் பிரகாரம் இல்லை. மூலவர் சன்னதிக்கு நேர் எதிரே, நந்தியும், தேவ இந்திர மயில் வாகனங்கள் உள்ளன.
இதே போல், இன்னொரு சுவாமி சண்முகர், தெற்கு நோக்கிய தனிசன்னதியில் அருள்பாலிக்கிறார். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்குப் பின்புறம் ஒரு சிவலிங்கம் உள்ளது. மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்குரிய அனைத்து பூஜைகளும் சண்முகருக்கும் நடத்தப்படுகிறது. போற்றிமார் கேரள முறைப்படியும், தந்திர சமுச்சியம் நூல் படியும், வைதீக தாந்த்ரீக முறைப்படியும், குமார தந்திர முறைப்படியும் இக்கோயிலில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
தினமும் 9 காலப் பூஜை நடக்கும் திருச்செந்தூரில், பூஜையின் போது, முருகப்பெருமானுக்கு, சிறுபருப்பு பொங்கல்,கஞ்சி,தோசை,அப்பம்,நெய்ச்சாதம்,ஊறுகாய்,சர்க்கரை கலந்த பொரி,அதிரசம்,தேன்குழல்,வேக வைத்த பாசிப் பருப்பு மற்றும் வெல்லம் கலந்த உருண்டை ஆகிய நைவேத்யங்களாக படைக்கப்படுகிறது.
பன்னிரு கரங்களுடன் காட்சியளிக்கும் ஆறுமுகப்பெருமானின் தோற்றத்தை நக்கீரர், அருணகிரிநாதர், குமரகுருபரர் ஆகிய அருளாளர்கள் வருணித்துப் போற்றியுள்ளனர். மூன்றடி உயரமுள்ள இந்த சண்முகர் திருமேனி, குமார தந்திர ஆகம விதிகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.
சண்முகர்,ஜெயந்திநாதர், குமர விடங்கர், ஆலவாய்ப் பெருமான் என திருச்செந்தூர் திருக்கோயிலில் நான்கு உற்சவர்கள் உள்ளனர்.இதில் குமர விடங்கர் மாப்பிள்ளை சுவாமி என்று போற்றப்படுகிறார்.
பன்னீர்மரத்தின் இலைகளில் பன்னிரண்டு நரம்புகள் உள்ள இலைகளைத் தேர்ந்தெடுத்து அதனுள் விபூதியை வைத்து மடித்து பிரசாதமாகக் கொடுக்கப் படுகிறது. ஆறுமுகப் பெருமான்,தனது பன்னிரு கைகளாலும் இலை விபூதியை விசுவாமித்திரருக்கு காசநோய் நீங்க வழங்கினார் என்பது வரலாறு.
இத்திருக்கோயிலுக்கு வெளியே இடது பக்கத்தில் கடற்கரையை ஒட்டி,வள்ளியம்மாள் குகை உள்ளது. இந்தக் குகைக்கு எதிரில் உள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்று தலவரலாறு கூறுகிறது. திருச்செந்தூர் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. கையில் சக்கராயுதம்இல்லாமல் இந்தப்பெருமாள் காட்சி அளிப்பது சிறப்பானதாகும்.
திருச்செந்தூர் திருக்கோயிலின் மற்றொரு சிறப்பு நாழிக் கிணறாகும். கடல்மணலில் அமைந்துள்ள உள்ள இந்தக் கிணற்றில், நன்னீர் ஊற்று உள்ளது. இது தவிர இத்தலத்தில் 24 தீர்த்தங்கள் உள்ளன.
திருச்செந்தூர் திருக்கோயில் திருப்பணியைச் செய்தவர்களில் மவுனசுவாமி, காசி சுவாமி, தேசிக மூர்த்தி சுவாமி, ஆறுமுகசாமி, வள்ளிநாயகம் சாமி ஆகிய ஐந்து சுவாமிகளின் தொண்டு மறக்க முடியாதது.
இதில் மவுனசுவாமி, காசி சுவாமி, தேசிக மூர்த்தி சுவாமி ஆகிய மூன்று சுவாமிகளும் திருக்கோயிலின் உள் பிராகாரத்தில் குரு பகவான் சன்னிதிக்கு எதிரே மூன்று தூண்களில் நின்ற கோலத்தில் சிலை வடிவில் காட்சி அளிக்கின்றனர்.
காசி சுவாமிகள், மௌன சுவாமிகள், ஆறுமுக சுவாமிகள் ஆகிய மூன்று சுவாமிகள் தங்களது காலங்களில் கோயிலைச் சுற்றி மண்டபங்களையும், கோபுரங்களையும் கட்டியுள்ளனர். இந்த மூன்று சுவாமிகளின் ஜீவசமாதிகள் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளன.
மாதப் பிறப்பு, சித்திரை விசு, சோமவாரம்,சஷ்டி,பிரதோஷம், அமாவாசை,சிவராத்திரி, கார்த்திகை, திருவாதிரை,உத்திரம், விசாகம், மாதக் கடைசி வெள்ளி, வசந்த விழா,வைகாசி விசாக விழா, நவராத்திரி விழா என மாதம்தோறும் திருவிழாக்கள் கொண்டாடப் படுகிறது.
குறிப்பாக, ஆவணி மற்றும் மாசி மாதங்களில் நடக்கும் திருவிழாவின்போது பிரம்மா,திருமால்,சிவன் என மும்மூர்த்திகளின் அம்சமாக முருகப் பெருமான் காட்சி தருகிறார். திருவிழாவின் ஏழாம் நாள் மாலையில் சிவப்பு வண்ணஆடை சாத்தி சிவனாகவும், எட்டாம் நாள் அதிகாலையில் வெண்ணிற ஆடையில் பிரம்மாவாகவும், உச்சி காலத்தில், பச்சை வண்ண ஆடை சாத்தி திருமாலாகவும் காட்சி அளிக்கிறார்.
திருச்செந்தூர் என்றாலே மகாசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பானது. ஒரு ஐப்பசி மாதத்து,வளர்பிறை சஷ்டியில் முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்டருளினார். எனவே ஐப்பசி மாதத்தில் கந்தர் சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.முதல் ஆறு நாட்கள் சஷ்டி விரதம்,சூரசம்ஹாரம்,ஏழாம் நாள் முருகன் தெய்வானை திருக்கல்யாணம்,அடுத்த ஐந்து நாட்கள் சுவாமி திருக்கல்யாணக் கோலத்தில் ஊஞ்சல் சேவை என மகா சஷ்டி திருவிழா 12 நாட்கள் கொண்டாடப் படுகிறது.
இதில் கந்தர் சஷ்டி திருவிழாவின் கடைசி நாளில்,தெய்வானையுடன் திருவீதியுலா வரும் முருகப்பெருமானை வரவேற்கும் விதமாக, சுவாமி மீது மஞ்சள் நீர் ஊற்றி மக்கள் முருகப்பெருமானைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
திருச்செந்தூரில்,முருகப்பெருமான் ஞான குருவாக விளங்குவதால், இந்தத் திருத்தலம் குரு தலமாகவே போற்றப்படுகிறது. உள்ளன்போடு,இத்தலத்துக்கு வந்து,முருகப்பெருமானை வணங்கினால்,வாழ்வில் சர்வ மங்கல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்று தலவரலாறு கூறுகிறது.