மின்னலில் வினக்கேற்றி

Estimated read time 1 min read

Web team

IMG-20240616-WA0061.jpg

மின்னலில் விளக்கேற்றி
நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
மீனாள் பதிப்பகம், 28-ஜி, பிளாக் தணிகாசலம் நகர், சென்னை-110. விலை: ரூ.25
*****
நூலின் அட்டைப்படம் மிக நன்று. தலைப்புக்கு ஏற்ற வண்ணப்படம். இனிய நண்பர் கே.ஜி. ராஜேந்திர பாபு அவர்கள் சில ஆண்டுகள் மதுரையில் வாழ்ந்தவர். தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு பட்டிமன்றங்களில் முழங்கியவர். தற்போது சென்னையில் வாழ்கிறார். வங்கிப் பணியில் இருந்து கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருபவர். உரத்த சிந்தனையாளர். அன்பாகப் பழகிடும் நல்ல உள்ளம் பெற்றவர்.

இந்த நூலில் திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் அணிந்துரை தோரண வாயிலாக உள்ளது. திரு. எம். பாலகிருஷ்ணன், புதுகைத் தென்றல் ஆசிரியர் புதுகை மு. தருமராசன், கவிதை உறவு, ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ஆகியோரின் அணிந்துரை மிக நன்று.

நூலின் முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.

கடல்.

கடல் மனிதனின் மனத்தைப் போலவே
அலை பாய்கிறது.
அதனால் தானே
அது இது வரை
ஏறவில்லை கரை!

கடலை இவர் பார்க்கும் பார்வை வித்தியாசமானது.

உலகமயம், தாராளமயம், புதிய பொருளாதாரம் என்ற பெயரில் விவசாயிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வருகின்றனர். அதனை உணர்த்தும் கவிதை மிக நுட்பமானது.

முடிவு

உழுதான் உழுதான் உழுதான் முடிவிலே
அழுதான் அழுதான் அழுதான்.

பல்வேறு பாடுபொருள்களில் கவிதை வடித்து உள்ளார். எதையும் உற்று நோக்கும் ஆற்றல் மிக்கவர் நூலாசிரியர்.

பொறுப்பில்லாமல், ஆரோக்கியம் பற்றிய அக்கறை இல்லாமல் சிகரெட் குடிக்கும் இளைஞர்கள் பற்றிய கவிதை நன்று.

சிகரெட்

வீட்டில் அடுப்பு எரியவில்லை! ஆனால்-
அவன் உதட்டில் சிகரெட் எரிகிறது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பாணியில் விழிப்புணர்வு விதைக்கும் கவிதை

முன்னேற

பஞ்சாங்கத்தை அப்புறப்படுத்து
பஞ்ச அங்கத்தை பயன்படுத்து

உழைக்காமலே ராசி பலன், சோதிடம் பார்க்கும் சோம்பேறிகளின் கவிதை மிக நன்று. ஒரு படைப்பாளியின் கடமை இது தான். செவ்வன செய்துள்ளார். உழைத்தால் உயரலாம். இந்த உண்மை புரிந்தால் வீடும் நாடும் வளம் பெறும். அதனை உணர்த்திடும் கவிதை.

உழைப்பு

“உழைப்பு சூரியன் போல் உன்னை மட்டுமல்ல
ஊரையே ஒளிமயமாக்கும்”

நூலின் தலைப்பில் உள்ள கவிதையின் கற்பனை மிக நன்று. கவிதைக்கு கற்பனை அழகு தான்.

மின்னலில் விளக்கேற்றி

மின்னலில் – கவிதை விளக்கேற்றி
சமூகச் சன்னலில் வைத்திடுவோம்
பொன்னொளி வீசட்டும்.

பாட்டரசன் மகாகவி பாரதி பற்றிய கவிதை மிக நன்று. பாரதி பற்றி எத்தனையோ கவிதைகள் வந்தாலும் இந்தக்கவிதை தனித்துவம் பெற்ற கவிதையாக ஒளிர்கின்றது.

தமிழைக் கொதிப்பாக்கித் தந்தவன்

வெள்ளை அரசு – அவனை
விரட்டியது ; வேட்டையாடியது
அதனால் அவன்
ஓடிக்கொண்டே பாடினான்
பாடிக்கொண்டே ஓடினான்
மண் விடுதலைக் கனலை ஊட்டினான்
பெண் விடுதலைத் தீபம் ஏற்றினான்.

இரும்பு கூட சும்மா இருந்தால் துருப்பிடித்து விடும். மனிதனும் உழைக்காமல் சும்மா இருந்தால் அவனை அவன் அம்மா கூட மதிக்க மாட்டாள் என்பது உண்மை. உழைப்பின் மேன்மை உணர்த்தும் கவிதை மிக நன்று.

உழைத்தால் தான் கிடைக்கும்

இரும்புக்குள் யந்திரம் உண்டு
செய்தால் தான் கிடைக்கும்
நூலுக்குள் ஆடையுண்டு
நெய்தால் தான் கிடைக்கும்
மூங்கிலுக்கும் ராகமுண்டு
இசைத்தால் தான் கிடைக்கும்.

இதழ்களில் எழுதிய கவிதைகள், கவியரங்கில் வாசித்த கவிதைகள் என அனைத்தையும் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள். பாராட்டுக்கள். சில வருடங்களுக்கு முன் தந்த இந்த நூலை இன்றுதான் வாசிக்க நேர்ந்தது. வாசித்தவுடன் விமர்சனம் பதிவு செய்துள்ளேன். இவ்வளவு நாள் படிக்காமல் இருந்து விட்டோமே என்று வருத்தப்பட்டேன். நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள்.

*****

Please follow and like us:

You May Also Like

More From Author