Web team
குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி !
குடையின்றி நின்று இருந்தபோது
குடையோடு வந்தால் என்னவள் !
வருக என்று கண் அசைத்தாள்
விழாக்கோலமானது மழைக்காலம் !
இருவரையும் இணைத்து ரசித்தது மழை
இனிதே பேசிக்கொண்டே பயணம் !
நெற்பயிர் வளர மட்டுமல்ல மழை
நல்காதல் வளரவும் உதவியது மழை !
யாருக்கும் கேட்காதவாறு பேசினோம்
யாரும் பார்க்காதவாறு மறைத்தது குடை !
மழையில் நனையவில்லை நாங்கள்
மகிழ்ச்சியில் நனைந்தோம் நாங்கள் !
குடைக்குள் இடம் தந்து பாரியானாள்
குமரியின் பார்வை குளிருக்கும் இதமானது !
சிக்கி முக்கி கற்கள் உரசல்போல
சின்ன வெப்பம் வந்து போனது !
குடைக்கு வெளியே சாரல் மழை
குடைக்கு உள்ளே மகிழ்ச்சி மழை !
சின்னத் தீண்டல் சிலிர்ப்பானது
சிரிப்பும் முகத்தில் எட்டிப் பார்த்தது !
வேகநடை நடந்துப் பழக்கப்பட்டவன்
வஞ்சிக்காக மெல்ல நடந்து மகிழ்ந்தேன் !
பெண்கள் குடை அளவில் சிறிதானது
பெரு மகிழ்ச்சிக்கு காரணமானது !
இடி மின்னல் வந்த போது அவள்
இன்னும் கொஞ்சம் நெருங்கினாள் !
குடையின்றி நின்றபோது நான்
கொடுமை மழை என்று சபித்தேன் !
குடையோடு அவளுடன் செல்கையில்
அருமை மழை என்று பாராட்டினேன் !
வானுக்கும் நன்றி வான்மழைக்கும் நன்றி
வஞ்சிக்கும் நன்றி வஞ்சியின் குடைக்கும் நன்றி !