சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஜூலை 21ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், இவ்வாண்டின் முற்பாதியில் சீன அந்நிய செலாவணி சந்தையின் இயக்க நிலைமையை தேசிய அந்நிய செலாவணி நிர்வாகம் வெளியிட்டது. தரவுகளின்படி. ஜுன் மாத இறுதியில், சீன அந்நிய செலாவணி கையிருப்பு 3 லட்சத்து 19 ஆயிரத்து 300 கோடி அமெரிக்க டாலராகும். இது 2022ஆம் ஆண்டின் இறுதியில் இருந்ததை விட 6530 கோடி அமெரிக்க டாலர் அதிகரித்து, நிதானமான நிலையில் உள்ளது.
சீனத் தேசிய அந்நிய செலாவணி நிர்வாகத்தின் துணைத் தலைவரும், செய்தித் தொடர்பாளர் வாங் ச்சுன்யீங் அம்மையார் கூறுகையில், அந்நிய செலாவணி சந்தை நிதானமாக இயங்குவதையும், ரென்மின்பியின் மாற்று விகிதம் சீரான வரம்புக்குள் இயங்குவதையும் பேணிக்காப்பதில் சீனாவுக்கு திறமை மற்றும் நம்பிக்கை உள்ளது. மேலும், தொடர்ந்து சீராக மீட்சி அடையும் சீனப் பொருளாதாரம், அந்நிய செலாவணி சந்தைக்கு அதிக ஆதரவு அளிக்கும் என்றார்.