வேலூரில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அணைக்கட்டு சுற்றுப்பகுதியிலுள்ள ஒடுகத்தூர், மேல் அரசம்பட்டு, கொட்டாவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாரக இருந்த பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தது.
இதற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது முதியோர் உதவித்தொகை பெறுவதால் பயிர் இழப்பீடு வழங்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த விவசாயிகள் வயலில் இறங்கி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து கடன்வாங்கி விவசாயம் செய்த தங்களின் குடும்பத்தை அரசு பாதுகாக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வோம் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.