Web team
நிலவொளியில் பனித்துளிகள் …
நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் !
durainandakumar1969@gmail.com
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11. அலைபேசி : 94446 40986 மின்னஞ்சல் : bookudaya@rediffmail.com விலை ரூபாய் 70.
அன்னை இராஜேஸ்வரி பதிப்பக த்தின் சார்பாக தரமாக நேர்த்தியாக அச்சிட்டு வழங்கி உள்ளனர் .அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு மிக நன்று .ஹைக்கூ கவிஞரும் , ஹைக்கூ ஆய்வாளரும் விஞ்ஞானியுமான நெல்லை சு .முத்து ,ஹைக்கூ முன்னோடி கவிஞர் மு .முருகேஷ் ஆகியோரின் அணிந்துரை மிக நன்று .பதிப்பாளர் கவிஞர் பா .உதய கண்ணன் பதிப்புரை நன்று .நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது .பாராட்டுக்கள் .
மரம் வெட்ட வெட்ட மழை பொய்க்கும் .மரம் மழைக்கான உரம். இதை உணராமல் பலர் மரங்களை வெட்டி வீழ்த்தி வருகின்றனர். அதனை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் ஹைக்கூ நன்று .
மரம் வெட்டிய களைப்பு
உறங்கப் போகலாம்
மர நிழலில் !
நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் அவர்கள் ஹைக்கூ நுட்பம் அறிந்து கவிதை வடித்துள்ளார் .காட்சிப்படுத்துதல் ஜப்பானிய ஹைக்கூ வகைகளில் ஒன்று .அந்த வகையில் காட்சிப்படுத்தி ஏழ்மையையும் உணர்த்துகின்ற ஹைக்கூ நன்று .
சோற்றுக்காக குனிந்தபடி
சேற்றைப் பார்க்கும்
நடவுப் பெண்கள் !
நடப்பு உவமையோடு அன்னையையும் நினைவூட்டும் வண்ணம் படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் அவரவர் அன்னை ஞாபகம் வருவது திண்ணம் என்று உறுதி கூறலாம் .
என்னை சுமந்தபடி
மின் தூக்கி
ஞாபகத்தில் அம்மா !
நம் நாட்டில் மூட நம்பிக்கை பெருகி வருகின்றது .பகுத்தறிவைப் பயன்படுத்துவதே இல்லை .மனிதனின் சிறப்பம்சமே பகுத்தறிவு என்பதை உணருவதில்லை .சனிக்கிழமை யாராவது இறந்து விட்டால் துணைப் பிணம் கேட்கும் என்று சொல்லி ஒரு கோழியையும் கட்டி அனுப்புவார்கள் .அந்த மூட நம்பிக்கை சாடும் ஹைக்கூ நன்று .
சனிப்பிணம்
கூடுதல் துக்கம்
காவு கோழி !
பிள்ளைகள் பெற்றோர்களை மறந்தாலும், பெற்றோர்கள் பிள்ளைகளை என்றும் மறப்பதே இல்லை .முதியோர் இல்லங்களில் வாழ்ந்தாலும் பிள்ளைகளின் நினைவுகளுடனேயே வாழ்கிறார்கள் என்பதை உணர்த்தும் ஹைக்கூ .
முதியோர் இல்லத்தில்
கூட்டுப் பிராத்தனை
மகனின் பிறந்தநாள் !
முரண் சுவையுடன் வறுமையை உணர்த்திடும் ஹைக்கூ மிக நன்று .
கருப்பு பாலிஷ்
மூன்று வேளை போட்டது
வெள்ளைச்சோறு !
இந்தி படித்தால் வேலை கிடைக்கும் . வசதி கிடைக்கும் . பணம் கிடைக்கும் .என்று கற்பனையாக கண்டபடி சிலர் தமிழகத்தில் உளறி வருகின்றனர் .ஆனால் இந்தி படித்த பல வடவர்கள் கூலிகளாக தமிழகம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர் .அதனை உணர்த்தும் ஹைக்கூ .
சென்னையில் மேம்பாலம்
கட்டுமானத் தொழிலில்
பீகார் தொழிலாளி !
ஆசையே அழிவுக்கு காரணம் என்றார் புத்தார் .புத்தரை வணங்கும் பலர் பேராசை பிடித்து அலைகின்றனர் .
ஆடம்பர பங்களா
வாசலில் கார்கள்
வரவேற்பறையில் புத்தர் !
பெண்ணை பாசம் கொட்டி வளர்க்கின்றனர் ஆனால் அவள் திருமணம் ஆனதும் கணவன் வீட்டிற்கு சென்றவுடன் பெண்ணைப் பெற்ற அன்னை கவலையில் மூழ்குவது உண்டு .
மணமுடித்துச் சென்ற
மகளின் ஆடைகளை
அணைத்தபடி அம்மா !
மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர் சிலர். அரசு பார் என்று எழுதி வைத்து குடிக்க அழைக்கின்றது மதுக்கடை. ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்பதை படித்து விட்டு குடிக்கின்றனர்
மதியை ,திறமையை இழந்து வருகின்றனர் .
கல்லறைக்குச் செல்லும்
குறுக்கு வழி
மதுக்கடை !
இயற்கை பற்றி பாடுவது ஜப்பானிய ஹைக்கூ கவிதையின் நுட்பங்களில் ஒன்று .அந்த வகையில் இயற்கை பாடும் ஹைக்கூ .
பச்சை
இரத்தம்
மருதாணி !
பல ஆண்டுகள் ஆன போதும் ஈழத்தில் எரிக்கப்பட்ட யாழ் நூலகம் நினைத்தாலே கண்ணில் கண்ணீர் வரும் .அரிய பல தமிழ் நூல்கள் எரித்து மகிழ்ந்தனர் .அதனை உணர்த்தும் ஹைக்கூ .
நெருப்பு
கண்ணீர் விடுமா ?
எரியும் நூலகம் !
இன்னும் பல கிராமங்களில் பெண் சிசுக் கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது .நகரங்களில் நவீனமாக பெண் சிசுக் கொலைகள் நடக்கின்றது .இதனால் பெண்களின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகின்றது .
தாய்ப்பால்
கள்ளிப்பால்
பாலினத்தைப் பொறுத்து !
விவசாயி மகிழ்வாக இல்லை . விவசாயத்தை விரும்ப வில்லை காரணம் மலை பொய்த்து விடுகின்றது .அண்டை மாநிலங்களில் வஞ்சித்து வருகின்றன .
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
வாழ்ந்தார்
வள்ளுவன் காலத்தில் !
நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து ஹைக்கூ வடித்திட வாழ்த்துகள் .
.