சீனாவுக்கு சவால் – உலகளாவிய உட்கட்டமைப்பில் அதானி நிறுவனம்!

Estimated read time 0 min read

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான முதலீட்டு திட்ட ஒப்பந்தத்தை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது. கடும் எதிர்ப்புக்கு இடையே பெறப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம் விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு இயக்குவதற்கு 1.85 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

சீனாவின் ஆதிக்கத்திற்கு சவால்விடும் வகையில், அதானி உலகளாவிய  உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆப்பிரிக்காவிற்கு 51 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க சீனா உறுதியளித்திருக்கும் அதே வேளையில், இந்தியாவின் அதானி குழுமம் கென்யாவின் நைரோபி விமான நிலையத்தைக் கையகப்படுத்திருக்கிறது.

அதானி குழுமம்,ஏற்கெனவே இந்தியாவில் மும்பை, அகமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஏழு விமான நிலையங்களையும் மற்றும் நவி மும்பையில் ஒரு புதிய விமான நிலையத்தையும் இயக்கி வருகிறது.

இந்நிலையில் , நைரோபியின் ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தை கையகப்படுத்தவும் நிர்வகிக்கவும் அதானி எண்டர்பிரைசஸ் கென்யாவில் ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளது.

2029ம் ஆண்டுக்குள் 750 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் புதிய முனையம் மற்றும் டாக்சிவே அமைப்பை உருவாக்கவும், 2035ம் ஆண்டுக்குள் மேலும் 92 மில்லியன்அமெரிக்க டாலர் முதலீடு செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வெளியே அதானியின் முதல் விமான நிலைய முயற்சி இதுவாகும். இந்த நடவடிக்கைக்கு கென்யாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தில் கென்யா விமானப் ஊழியர்கள் கடந்த திங்கள்கிழமை அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கென்யா விமான நிலைய ஆணையத் தொழிலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வேலைநிறுத்ததத்தால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. விமான நிலையத்தைக் குத்தகைக்கு விடுவதால் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குச் சாதகமாகி, தங்கள் பணிக்கு ஆபத்து வரலாம் என்று கென்ய விமான நிலைய தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கென்ய அரசின் தொழில்நுட்ப, நிதி மற்றும் சட்டவிதிகளுக்கு உட்பட்டே அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கென்ய அரசு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்குள் இந்திய நிறுவனம் நுழைந்திருப்பது, ஆப்பிரிக்காவின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளித்த சீனாவிற்கு ஒரு சவாலாகவே பார்க்கப் படுகிறது.

ஏற்கெனவே, ஜிஎம்ஆர் என்ற இந்திய நிறுவனம் பிலிப்பைன்ஸில் உள்ள மக்டன் செபு சர்வதேச விமான நிலையத்தை இயக்குகிறது. மேலும் கிரீஸ் மற்றும் இந்தோனேசியாவின் விமான நிலையங்களை இயக்குவதற்கான ஒப்பந்தங்களையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், அதானி குழுமம் கென்யாவின் முக்கிய விமான நிலையத்தைக் கையகப்படுத்தி இருப்பது புவி சார் அரசியலின் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதானியின் உலகளாவிய உள்கட்டமைப்பு திட்டச் செயல்பாடுகள் சீனாவிற்கு போட்டியாக அமைகிறது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

சாலைகள், ரயில்வே, கப்பல் பாதைகள், துறைமுகங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி மூலம் சீனாவை பல்வேறு நாடுகளுடன் இணைக்கும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்துக்கு போட்டியாக அதானி குழுமம் களமிறங்கி இருக்கிறது.

ஏற்கனவே இலங்கை, இஸ்ரேல் நாடுகளின் துறைமுகங்கள் அதானி குழுமம் வசம் உள்ளது. மேலும் வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவிலும் துறைமுகங்களைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறது அதானி குழுமம்.

இதன் பின்னணியில் தான், நைரோபி விமான நிலையத்தை அதானி குழுமம் கையகப்படுத்துவதற்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்கள் இந்தியாவுக்கு எதிரான கோபமாக மாறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது

Please follow and like us:

You May Also Like

More From Author