கவிச்சுவை மதிப்புரை

Estimated read time 1 min read

Web team

IMG_20240911_131258.jpg

கவிச்சுவை!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!

நூல் விமர்சனம் : யாழ் சு. சந்திரா,
பேராசிரியர், ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, மதுரை

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,

தியாகராய நகர்,
சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769
மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com

பக்கம் 186.விலை ரூபாய் 120.

******

இனிமேல் யாப்பு மரபு ரவி …

‘ஹைகூ’ கவிஞராய் குறுகுறு நடந்த கவிஞரின் தொடர் ஓட்டம் (தொடக்க நடை) இந்தக் ‘கவிச்சுவை’ நூல்!

ஏழு தலைப்புகளில் தனது பதிவுகளைச் சரமாகத் தொடுத்துக் கவிச்சுவை எனும் மாலையாக்கிச் தமிழன்னைக்குச் சமர்ப்பித்துள்ளார் கவிஞர் இரவி!

அண்ணலுக்குக் கடிதம் எழுதிக் கவிச்சுவையைத் தொடங்கும் கவிஞர் தேசத்தந்தையின், தியாக உள்ளத்தை நினைவு கூறுகிறார். அப்துல்கலாம், காமராசர், பாவேந்தர் தொடங்கி தமிழண்ணல், நன்னன், அப்துல் ரகுமான எனத் தமிழர்களைத் தம் கவிச்சட்டகத்தில் ஓவியமாக்கும் கவிஞரின் படைப்பு வானம் ‘ஸ்டீபன் ஹாக்கிங்’-ஐயும் வானவில்லாகக் காட்சிப்படுத்துகிறது.

‘உடலை விட உயர்ந்தது மனம் என மெய்ப்பித்தவர்
உடல் நலமின்றியே உலக சாதனை நிகழ்த்தியவர்!’

என்ற கவிதை நம்பிக்கையின் விதையாகிறது.

பெண்ணியக் கவிஞராகப் பெண்ணே பிரபஞ்சம் எனப் பிரகடனப்படுத்தும் கவிஞர்,

“பெண் எனும் பிரபஞ்சம் இன்றிப்
பிறக்க முடியாது உலகில் எந்த ஆணும்”

என்பார். ‘பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகப் புறப்படு’ எனக் கட்டளையிடும் கவிஞர்,

மூச்சு உள்ளவரை பாசம் காட்டுபவள் மகள்!
மோகம் செய்யாது நேசம் வைப்பகள் மகள்!

எனப் பெண்குழந்தையின் தந்தையாய்க் கர்வம் கொள்கிறார்.

விதையை உலகில் துளிர்க்க வைக்கிறது. காடுகள் செழித்தால் மழை வரும் எனச் சுட்டும் கவிஞர் வாழ்வாங்கு வாழ நன்றே செய்வது நல்வழி என்கிறார்.

இறந்த பின்னும் நீ வாழ விரும்பினால்
இன்றே நன்று செய்து வாழ்வாங்கு வாழ்க!

என்ற கவிதை, இன்றைய நல்வழி எதிர்கால நன்மைக்குக் ராஜபாட்டை எனக் கவிதைவழி கைகாட்டுகிறார்.

‘கனவு தகர்ந்திட்ட போதும் .

…’

என்ற தலைப்பிலான கவிதை சுயதம்பட்டமாக இல்லாமல், சுமைகளின் வரலாறாக,

‘தணிக்கையர் ஆகும் கனவு தகர்ந்திட்ட போதும்
தன்னிகரில்லாப் பெருமைகள் வந்து சேர்ந்தன!’

எனத் தனது கவிதைகள், கல்லூரிப் பாடமானது பற்றிய பிரகடனம், வாசிப்போரையும் நம்பிக்கை விழுதுகளை நேசிக்க வைக்கும் மாய மோதிரமாகிறது.

‘முடியுமா என்று தயங்குவது விடுத்து
முடியும் என்றே பறந்திட வேண்டும்!’

என்ற கவிஞரின் கவிதை வரிகள், வாசகர்களான நம்மையும் ஊக்கம் பெற்றிட வழி வகுக்கிறது.

காதல் வேதனை அல்ல ; வாழ்வின் சாதனை என உணர்த்த முற்படும் கவிஞர்,

“மூச்சு உள்ளவரை உன் நினைவு
மூளையின் ஓர் ஓரத்தில் இருக்கும்!”

எனக் காதலியோடு காதலையும் உயரத்தில் அமர வைக்கிறார்,. காதலியின் விழி ஈர்ப்பு விசைக்குக் கவிஞர் ஆட்படுவது அவருக்கு மட்டுமல்ல, வாசகர்களாகிய நம்மையும் காதல் பார்வையில் ஆழ்த்தி விடுகிறது.

சமகால நடப்புகள் படைப்புத் தளத்தில் பதிப்பிடப்படுவதில்லை என்பது இன்றைய குற்றச்காட்டு! உலகமே வியந்து பார்த்த சல்லிக்கட்டு போராட்டத்தை, ‘மெரினா புரட்சி’ என்ற தலைப்பில் பதிவு செய்கிறார் கவிஞர்.

மிரண்டது டெல்லி பிறந்த்து சட்டவழி
மன்றத்தில் சட்டம் இயற்றி அனுப்பினர் !

எனப் பதிவு செய்கிறார். தலைவன் இல்லாத போராட்டம் வென்றது! என்பது இந்த 21ஆம் நூற்றாண்டின் புதிய போக்கு!

விழிப்புணர்வு மட்டும் அன்றி சமூகப்பொறுப்பும் அக்கறையும் கொண்ட கவிஞர் இரவி, தனது கவிதை நூல் முழுமையையும் வெண்செந்துறை யாப்பில் இக்கவிதை நூலைப் படைத்துள்ளார்.

யாப்பு மரபு என்னும் பாடுபொருள் மரபு மீறலாக மின்னுகிறது. வாழ்த்துக்கள்! இனிமேல் ஹைகூ ரவி இல்லை, ‘யாப்பு மரபு ரவி’ என்று தமிழுலகம் அழைக்கலாம்!

Please follow and like us:

You May Also Like

More From Author