சென்னை : கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திருப்பத்தூர், தி.மலை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (29-ம் தேதி) 11 மாவட்டங்களில் கனமழையும், நாளை மறுநாள் (30-ம் தேதி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை நிலவரம்
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.