சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆண்டுகளில் நாட்டின் சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி சாதனைகள் பற்றிய அறிக்கையை சீனத் தேசிய புள்ளிவிவரப்பணியகம் அண்மையில் வெளியிட்டது.
கடந்த 75 ஆண்டுகளில், பொருளாதாரம், அறிவியல் தொழில் நுட்பம், ஒட்டுமொத்த ஆற்றல் ஆகிய துறைகளில் சீனாவின் திறன் தெளிவாக வலுவடைந்து, சர்வதேச செல்வாக்கு பெரிதும் அதிகரித்தது. 1979முதல் 2023ஆம் ஆண்டு வரை, சீனப் பொருளாதார வளர்ச்சி, ஆண்டுக்கு 8.9விழுக்காடு அதிகரித்தது.
இது, அதே காலத்தில், உலகப் பொருளாதாரத்தின் 3விழுக்காடு என்ற சராசரி வளர்ச்சி விட அதிகம். உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான சீனாவின் வருடாந்திர பங்களிப்பு விகிதம், 24.8விழுக்காட்டுடன், உலகில் முதல் இடம் வகிக்கின்றது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட தொடக்க காலத்தில், நாட்டின் பொருளாதார அடித்தளம் மிகவும் பலவீனமாகவும் பொருளாதார அளவு சிறியதாகவும் இருந்தன. 1952ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 3000கோடி அமெரிக்க டாலராக மட்டும் இருந்தது.
1978ஆம் ஆண்டில் அது 14950கோடி அமெரிக்க டாலராக அதிகரித்தது. அது, உலகப் பொருளாதார அளவில் 1.7விகிதம் வகித்தது. சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட பின், சீனாவின் மொத்த பொருளாதாரம் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றது.
2023ஆம் ஆண்டில் அது, 17இலட்சத்து 80ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியது. இது, உலகின் மொத்த விகிதத்தில் 16.9விழுக்காடாக அதிகரித்து, தொடர்ந்து உலகளவில் 2ஆம் இடம் வகிக்கின்றது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.