ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டு புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.
பெரும்பாலும் பொங்கலிட மண்பானைகள் தான் பெண்கள் பயன்படுத்துவார்கள். அந்த பானையில் மஞ்சள் குலையையும், பூ மாலையையும் கட்டி அலங்கரித்து பொங்கல் வைப்பார்கள். வீட்டுக்கு முன் விறகு அடுப்பில் மண்பானையில் பொங்கல் வைத்து படைத்து வழிபடுவது வழக்கம்.மண்பானையில் வைக்கும் பொங்கலுக்கு சுவையும், ஆரோக்கியமும் மிகுந்தது.
அதேபோல் தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பொங்கல் வைப்பதற்கு மண்பானைகளையே பலரும் பயன்படுத்துகின்றனர். மலேசியாவில் உள்ள தமிழர்கள் பொங்கல் வைப்பதற்காக பிரத்யேகமாக, நெல்லை மேலப்பாளையம் குறிச்சியில் மண்பானை உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆனால் காலப்போக்கில் பானைகளில் பொங்கல் வைக்கும் பழக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது. குறிப்பாக நகரங்களில் வசிப்பவர்கள் பானைகள் கிடைக்காததால் எவர்சில்வர் பாத்திரங்களை பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதேபோல் விறகு அடுப்பை கைவிட்டு கேஸ் அடுப்பில் பொங்கல் வைக்கும் பழக்கத்திற்கு மாறிவிட்டனர். என்னதான் வசதி வாய்ப்புகள் வந்தாலும் நகரத்தில் வசித்தால் கூட பழமையை மறக்காமல் பானைகளை தேடி பிடித்து வாங்கி பொங்கல் வைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.