உலக உத்தமர் கலாம்

Estimated read time 1 min read

Web team

IMG_20240202_145305.jpg

உலக உத்தமர் கலாம் !
நூல் தொகுப்பாசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-600 017.
*****
மாமனிதர் அப்துல் கலாம் படம் தாங்கி எத்தனையோ நூல்கள் வந்து விட்டன. ஆனால் இந்த நூல் அட்டைப்படம் போன்று, உயிரோட்டமான கலாம் அவர்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாக வடிவமைத்த பதிப்பகத்தாருக்கு முதல் பாராட்டு.
கோவையின் பெருமைகளில் ஒன்றானவர், தன்னம்பிக்கை உரையாளர், எழுத்தாளர், கவிஞர் என்ற பன்முக ஆளுமையாளர், இனிய நண்பர், சிந்தனைக் கவிஞர் கவிதாசன்.
சிந்தனைக் கவிஞர் கவிதாசன் 16 பேரிடமிருந்து கட்டுரைகள் பெற்று, தானும் ஒரு கட்டுரை எழுதி தொகுத்து வழங்கி உள்ளார். அவருக்கு இரண்டாவது பாராட்டு. சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கு வாய்த்த சடையப்ப வள்ளல் ரூட்ஸ் குரூப் நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் கே. இராமசாமி அவர்கள். இந்நூலிற்கு அணிந்துரை வழங்கியது மட்டுமன்றி வெளியீட்டு விழாவில் நூலை வெளியிட்டு சிறப்பித்தார்கள். கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி தலைவர் முனைவர் மா. ஆறுச்சாமி சிறப்பான வாழ்த்துரை வழங்கி உள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு கோவை சென்று இருந்தேன். மாநாடு போல நடந்தது. 6 மணி விழாவிற்கு 5 மணிக்கே வந்து இலக்கிய ஆர்வலர்கள் இருக்கையில் அமர்ந்து விட்டார்கள். பள்ளி மாணவ, மாணவியரின் ஆடலுடன் விழா சீரும் சிறப்புமாக நடந்தது. கலாமின் அறிவியல் ஆலோசகர் பண்பாளர் பொன்ராஜ் அவர்கள் சிறப்புரையில் ‘உலக உத்தமர் கலாம்’ பொருத்தமான தலைப்பு என்று சொல்லி, கலாம் அவர்கள் தென் ஆப்பிரிக்காவிற்கு மருத்துவக்கல்வி தொடர்பாக ஆற்றிய தொண்டை, ஐரோப்பிய நாடுகளில் ஆற்றிய உரையை, உலக நாடுகளுக்கு உதவிய கலாமின் உயர்ந்த உள்ளத்தை மிக விரிவாக எடுத்து இயம்பினார். பல புதிய தகவல்கள் அறிந்திட வாய்ப்பாக அமைந்தது.
ரூ. 200 மதிப்புள்ள நூலை ரூ. 100 என்று விலையிட்டு வழங்கும் குமரன் பதிப்பகத்தாருக்குப் பாராட்டுகள். முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் திரு. டி.ஆர். கார்த்திகேயன் அவர்கள் இந்நூலிற்கு தோரண வாயிலாக அணிந்துரை வழங்கியது மட்டுமன்றி நூலின் தலைப்பில் ஒரு கட்டுரையும் எழுதி உள்ளார். மாமனிதர் கலாம் அவர்கள் என்ன பதவி வேண்டும், கேளுங்கள் என்று வற்புறுத்திய போதும் எதையுமே கேட்காத நேர்மையான உள்ளத்தை மலரும் நினைவுகளாகப் பதிவு செய்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறையின் செயலர் முனைவர்
மூ. இராசாராம் இ.ஆ.ப. அவர்களின் திருக்குறள் ஆங்கில நூலிற்கு மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் அணிந்துரை எழுதி இருந்தார்கள். அந்த நூலிற்கு மதிப்புரை நான் எழுதி இருந்தேன். அதற்கு செயலர் என்னை பாராட்டினார். கலாம் அவர்கள் மீது அளவற்ற பாசம், நேசம் கொண்டவர். கட்டுரையில் அவர் எழுதியுள்ள வைர வரிகள் இதோ.
“மகாத்மா காந்தியடிகளின் உறுதி, ஜவஹர்லால் நேருவின் தொலைநோக்கு, ராஜாஜியின் ராஜதந்திரம், பெரியாரின் முற்போக்குச் சிந்தனை, பாரதியின் எழுச்சி, காமராஜரைப் போல தியாகம், அண்ணாவைப் போல ஆளும் திறன், எம்.ஜி.ஆரைப் போல் வசீகரம் – இப்படி எல்லோரையும் ஒன்றிணைந்து வார்த்தெடுத்த வடிவம் அப்துல் கலாம்”.
கலாம் அவர்களை நன்கு படம், பிடித்துக் காட்டி உள்ளார். பாராட்டுக்கள் .
திரு. டி.ஆர். கார்த்திகேயன் அவர்களின் அணிந்துரையில் இந்த வரிகளை மேற்கோள் காட்டி உள்ளார். வெளியீட்டு விழா மேடையிலும் இந்த வரிகளை குறிப்பிட்டார்.
சென்னை வெள்ளத்தில் இறங்கி பல உயிர்களைக் காத்திட்ட காவல்துறையின் பெருமைகளில் ஒன்றாகத் திகழும் முனைவர் செ. சைலேந்திரபாபு இ.ஆ.ப. அவர்கள், மாமனிதர் கலாம் அவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பை, பிரமிப்பை நூலில் பகிர்ந்து உள்ளார். பாராட்டுக்கள்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் சி. சுப்பிரமணியன் அவர்கள், ‘நானும் கலாமும்’ என்ற தலைப்பில் கட்டுரை வடித்துள்ளார். மாமனிதர் கலாமுடன் ஏற்பட்ட சந்திப்பு பற்றி மலரும் நினைவுகளை பகிர்ந்து உள்ளார்.
“கலாம் அவர்கள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாற வேண்டுமேன்றே கனவு கண்டார்கள்” என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சி. சுவாமிநாதன் அவர்கள் “இதயத்தைத் தொட்ட ஏந்தல்’ என்ற தலைப்பில் கட்டுரை வழங்கி உள்ளார்.
“சாமான்யனாய் இருந்து சாதனையாளனாய் மாறி சகாப்தமாய் நின்றவர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம். எளிமைக்கும், நேர்மைக்கும் முன் உதாரணமான அற்புதமான மனிதர்”.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வெ.மா. முத்துக்குமார் அவர்கள், “இளைஞர்களின் எழுச்சி நாயகன்” என்ற தலைப்பில் எழுதி உள்ளார். தொடக்கமே நன்று. “இளைஞர்களின் எழுச்சி! இந்தியாவின் வளர்ச்சி! என்கிற தாரக மந்திரத்திற்குச் சொந்தக்காரர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள்.”
‘ நமது நம்பிக்கை’ மாத இதழ் ஆசிரியர் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள், ‘கலாமின் கடைசிச் சொல்’ என்ற தலைப்பில் எழுதி உள்ளார்.
“ஞானிகள் குறிப்பாக ஜென் மார்கத்து ஞானிகள் உடலை விட்டு நீங்கும் நேரத்தில் சொல்லும் கடைசிச் சொல்லை அவரது மார்க்கத்தைச் சார்ந்தவர்கள் பெரிதும் மதிப்பார்கள். ஷில்லாங்கில் கலாம் உச்சரித்த கடைசை சொல் “TERRORISM” (தீவிரவாதம்) என்று தெரிய வருகிறது. ஒரு தேசம் வல்லரசாகும் வழியைத் தடுக்கும் தடைக்கற்களில் தீவிரவாதமும் ஒன்று”.
‘மகளே நீ வாழ்க’ இயக்கம் தலைவர்
திரு.
T. சம்பத்குமார் அவர்கள், “செயலாற்றலின் மறுபெயர் கலாம்’ என்ற தலைப்பில் எழுதி உள்ளார். கலாமின் நண்பராக இருந்தவர் இவர். சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் வைர வரிகளைக் குறிப்பிட்டு மலரும் நினைவுகளைப் பதிவு செய்துள்ளார்.
அந்த வரிகள்.
உப்பில்லாமல் கூட வாழலாம், ஆனால்
நல்ல நட்பில்லாமல் வாழ் முடியாது.
நட்பின் மேன்மையை உணர்த்திடும் மறக்க முடியாத வைர வரிகள். இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு இனிய நண்பர் கலாம் கே.ஆர். சுப்ரமணியனுடன் தான் கோவை சென்று வந்தேன். அவர் தான் விழாவை அலைபேசியில் படம் பிடித்து அனுப்பி உதவினார். நூல் படிக்கும் வாசகர்கள் அவரவர் நட்பை அசை போட உதவியது நூல்.
கங்கா மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சண்முகநாதன் அவர்கள், மாமனிதர் அப்துல் கலாம்” என்ற தலைப்பில் எழுதி உள்ளார்.
“சாதிக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டிருந்த கலாம் கூறுகிறார். “மனதையும், எண்ணங்களையும் கட்டுப்படுத்தி என் தலைவிதியை எனக்குச் சாதகமாக அமைத்துக் கொள்ள முயற்சி செய்தேன்!”.
வி.ஜி.எம். மருத்துவமனையின் தலைவர், டாக்டர் வி.ஜி.மோகன் பிரசாத், ‘காலம் கரைத்திடாத கலாம்’ என்ற தலைப்பில் எழுதி உள்ளார்.
மனிதப்புனிதர் அப்துல் கலாம் அவர்களை நினைக்கும் போதெல்லாம் எனக்கு,
மணமுள்ள மலர்களில் தேனீ கூடும்
வண்டுகள் இன்னிசை பாடும்
திறமை உள்ளவர் எங்கிருந்தாலும்
தேசம் அவரிடம் ஓடும் !
என்ற கவியரசு கண்ணதாசன் வரிகளே நினைவுக்கு வரும்.
மாமனிதர் கலாம் அவர்களுடன் பணிபுரிந்தவர் விஞ்ஞானி நெல்லை க. முத்து அவர்கள். ‘கலாம் சில நினைவுகள்’ என்ற தலைப்பில் எழுதி உள்ளார். ஏவுகணை நாயகரின் ஏவுகனை அனுபவங்களை அடுக்கி உள்ளார். அக்னிவெற்றி பற்றி வடித்த கவிதை நூலில் உள்ளது.
பாரதியார் பலகலைக்கழகத்தின் தொலைமுறைக் கல்விக்கூடம் இயக்குனர் முனைவர் கே. கோவிந்தராஜ் அவர்கள், ‘மனிதம் படைத்த மாமனிதர்’ என்ற தலைப்பில் எழுதி உள்ளார். “அவர் மறையவில்லை, ஒற்றுமையுடனும், புதிய உத்வேகத்துடனும் நம் தாய்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உழைக்கும் ஒவ்வொருவர் உருவிலும் மாமனிதர் அப்துல் கலாம் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்”.
சென்னை வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் திரு. ஜெ. கமலநாதன் அவர்கள் ‘பாரத ரத்னா அப்துல் கலாம் வாழ்க்கைத் துளிகள்’ என்ற தலைப்பில் எழுதி உள்ளார்.
“எடுத்துச் சென்ற இரண்டு சூட்கேஸ்களுடன் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறினார்”
சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சி அமைப்பாளர் திரு. கலையன்பன் அவர்கள் ‘கனவு மெய்ப்பட கலாம் அவர்களே வழித்துணை’ என்ற தலைப்பில் எழுதி உள்ளார்.
“அவருடைய கடைசி மூச்சு மாணவர்கள் மத்தியில் நாளைய நம்பிக்கை விதைகளை விதைத்து கொண்டிருக்கும் போதே காற்றில் கலந்தது”. இந்நூலின் தொகுப்பாசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள், ‘இளைஞர்களின் உதயக் கிழக்கு’ என்று கவித்துவமான தலைப்பிட்டு எழுதி உள்ளார்.
உனது எல்லா நாள்களிலும்
தயாராக இரு
எவரையும் சமவுணர்வோடு சந்தி
நீ பட்டறைக்கு கல்லானால்
அடி தாங்கு
நீ சுத்தியானால் அடி.
மந்திரச் சொற்கள் இவை. இவற்றை கடைபிடித்தால் வாழ்க்கையில் சிறக்கலாம் என்பது உண்மை.
தினமணி வாசகர்கள் பலரும் விரும்பி வாசிக்கும், பார்க்கும் கார்டூனிஸ்ட் மதி அவர்கள், “வாராது வந்த மாமணி” என்ற தலைப்பில் கட்டுரை தந்துள்ளார். மாமனிதர் கலாம் அவர்கள், குடியரசுத் தலைவர் பதவியின் போது இருக்கையில் அமர்ந்து பணி செய்யும் படத்தின் விளக்கத்துடன் தொடங்கி முகநூலில் அதிகம் பகிரப்பட்ட கார்டூன், “கடையை மூடுன்னு எந்தக் கும்பலும் கிளம்பலை ; வாகனங்கள் மீது கல்லெறிஞ்சு கண்ணாடியை உடைக்கலை ; எதையும் எவரும் தீ வெச்சு கொளுத்தலை ; யாரும் தீக்குளிச்சு சாகலை ; அதான் சொல்றேங்க, ஒரு மாமனிதராக வாழ்ந்ததோடு பகுத்தறிவையும் வளர்த்துட்டு போய் இருக்கார்”.
கருத்துப்பட ஓவியர் மதி இந்த நூலில் எழுதியிருந்த ஒரு தகவல். கருத்துப்பட ஓவியர் மதியின் நூல் வெளியீட்டு விழாவிற்கு மாமனிதர் கலாமும் எழுத்தாளர் ஜெயகாந்தனும் வந்து இருந்தனர். இந்த விழா முடிந்ததும் எழுத்தாளர் ஜெயகாந்தன் விழா மற்றோர் இடத்தில் நடக்க உள்ளது .அதில் மாமனிதர் கலாமும் கலந்து கொள்ள உள்ளார் .ஓவியர் மதி ,எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களிடம் சென்னை போக்குவரத்தில் நீங்கள் தனியா சென்றால் விழாவிற்கு போவது சிரமம் .கலாம் அய்யாவுடன் சென்று விடுங்கள் என்கிறார் .அதற்கு ஜெயகாந்தன் அய்யா சம்மதிப்பாரா? என்கிறார் .நான் கேட்கிறேன் என்று மதி கேட்கிறார் .கலாம் அய்யா உடன் சம்மதிக்கிறார் .ஜெயகாந்தன் மெதுவாக நடப்பார் எனவே மெதுவாக நடந்து உடன் அழைத்துச் செல்ல வேண்டுகிறார். அதன்படியே அழைத்துச் சென்று விழா நடந்தது .
மாமனிதர் கலாம் அவர்களின் உயர்ந்த உள்ளதைப் பாராட்டி மதி எழுதிய நிகழ்வு மலரும் நினைவுகளை மலர்வித்தது .
.இதேபோன்ற நிகழ்வு இந்த நூல் வெளியீட்டு விழாவிலும் நடந்தது . இனிய நண்பர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் இரவு உணவு சாப்பிடத் விட்டுதான் போக வேண்டும் அன்புக்கட்டளை இட்டார். கலாம் அறிவியல் ஆலோசகர் திரு .பொன்ராஜ் ,கலாம்
கே .ஆர் .சுப்பிரமணியன்,நான் அனைவரும் உணவு சாப்பிட்டோம். நண்பர் கலாம் கே .ஆர் .சுப்பிரமணியன் சொன்னார் .திரு .பொன்ராஜ் அவர்கள் கோவையில் இருந்து மதுரைக்குத்தான் செல்கிறார் அவருடன் மகிழுந்தில் செல்லலாம் கேட்கிறேன் என்றார் .எனக்கும்
திரு .பொன்ராஜ் அவர்களைத் தெரியும் .மதுரை விமான நிலையத்தில் சந்தித்து உரையாடி இருக்கிறேன் .
இருந்தாலும் அவரிடம் கேட்க வேண்டாம் .என்றேன் .கலாம்
கே .ஆர் .சுப்பிரமணியன் கேட்டார் .உடன் திரு .பொன்ராஜ் அவர்கள் தாராளமாக இருவரும் வாருங்கள் என்று மகிழுந்தில் ஏற்றிக் கொண்டார் .இரவு முழுவதும் தூங்காமல் மூவரும் மாமனிதர் கலாம் பற்றி பேசிக் கொண்டே வந்தோம் . மறக்க முடியாத நாளாக இருந்தது .
மாமனிதர் கலாம் போலவே அறிவியல் ஆலோசகர் திரு .பொன்ராஜ் அவர்களும் உயர்ந்த உள்ளத்தோடு, கர்வம் ஏதுமின்றி எளிமையாக பேசியது .நூல் படித்தபோது மலரும் நினைவுகளை மலர்வித்தது .
இந்த நூலில் கட்டுரை எழுதிய 17 பேரில் 16 பேர் மிகப்பெரிய மனிதர்கள். மிகப்பெரிய பதவிகளில் உள்ள ஆளுமையாளர்கள். நான் ஒருவன் தான் மிகச் சிறியவன். “மாமனிதர் அப்துல் கலாம்” என்ற தலைப்பில் நான் (கவிஞர் இரா. இரவி) எழுதிய கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. இதற்கு முழு முதற்காரணமாக இருந்த இனிய நண்பர் பண்பாளர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கு நன்றி.
இந்த நூலில் மாமனிதர் அப்துல் கலாம் பற்றிய பல புதிய தகவல்கள் உள்ளன. அவரின் உயர்ந்த உள்ளத்தை படம் பிடித்துக் காட்டி உள்ளனர். மாமனிதரின் புகழ் என்ற மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக இந்நூல் ஒளிர்கின்றது. மிகவும் சிரமப்பட்டு தொகுத்து நூலாக்கிய சிந்தனைக் கவிஞர் கவிதாசனுக்கு பாராட்டுக்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author