ஆகாயச்சிறகுகள்

நூலின் பெயர் : ஆகாயச்சிறகுகள் !
நூல் ஆசிரியர் : எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி !
மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி !

நூலின் அட்டைப்படம் அற்புதமாக உள்ளது. நூலை தமிழக ஜனநாயக மாதர் சங்கத்தை நிறுவியவர்களில் முக்கியமானவரான கே.பி. ஜானகியம்மாளுக்கு காணிக்கையாக்கி இருக்கின்றார். நூலாசிரியர் மேலாண்மை பொன்னுசாமி அதிகம் படிக்காதவர். ஆனால் சாகித்ய அகதெமி பரிசை வென்றவர். ஆவருடைய பெயரில் மேலாண்மை இருப்பதால் இவர் மேலாண்மை படித்தவர் என்று தவறாக எண்ணி விடக் கூடாது. “ மேலாண்மறை நாடு “ என்பது அவர் ஊர் பெயர் அதன் சுருக்கமே மேலாண்மை ஆகும். இவரது வெற்றிக்கு காரணம் மக்கள் மொழிலேயே நாவல் எழுதுவது தான் இவரது தனிச்சிறப்பு. இவரது கதையை பெரிய அறிஞர்கள் முதல் சாதாரண பாமரர் வரை யார் படித்தாலும் எளிதில் புரியும் எளிய நடை.

நூல் ஆசிரியர் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி கதை சொல்லும் விதத்தில் வாசகர் மனதில் காட்சிப்படுத்தி உண்மை நிகழ்வை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகின்றார். நாவலின் கதாநாயகன் பால்ச்சாமி, பொதுவுடைமை சிந்தனையில் ஈடுபாட்டுடன் நூல் ஆசிரியர் இருப்பதால் தன் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகளை கோர்த்து கதையாக வடித்து உள்ளார்.

முயற்சி திருவினையாக்கும் என்பதை ஒரே நாளில் கதாநாயகன் நீச்சல் பயின்ற நிகழ்வை கதையில் அவரது மொழியிலேயே காண்க.

பால்ச்சாமி முழுசாகத் தேறி விட்டான், அவனும் பம்ப்செட் ரூமின்
உச்சியிலிருந்து குதித்தான். பல்டியடித்துக் கொண்டே குதித்தான்,
தலைகீழாக, அம்பாகக் குதித்தான்,
முங்கு நீச்சலில் மீனை விட லாவகமாய விரைவின்
வீச்சாய்…
கூட இருந்த பையன்களெல்லாம் பிரமித்தனர்.
ஒரே நாளில் இம்புட்டுத் தேர்ச்சியா?
ஆர்வந்தான், முயற்சிதான்,
அதெல்லாத்தையும் விட ஒங்கிட்டேயிருக்கிற தீவிரம்
தான் இந்த வேகத்துக்குக் காரணம்
அது தான் பால்ச்சாமி. பால்ச்சாமியின் சுபாவம். இந்தச்
சுபாவம் தான் இவனைப் பல சிரமங்களுக்குள் தள்ளவும்
செய்தது.

பல நாள் முயன்றும் நீச்சல் தெரியாத நபர்கள் பலர் உண்டு. ஈடுபாட்டுடன் செய்யும் எந்த செயலிலும் வெற்றி கிடைக்கும் என்பதை நன்கு உணர்த்துகின்றார் கதை ஆசிரியர். கடவுள் நம்பிக்கை இல்லாத சிறந்த நடிகர் கமலஹாசன் பற்றியும், சலங்கை ஒலிப்படத்தில் அவரது நடிப்பு பற்றியும் பல நிகழ்வுகள் காட்சியாக வருகின்றது. கமலின் நடிப்பை பார்த்து பிரமித்து, மாலைக்காட்சி பார்த்தவன் திரும்பவும், இரவுக்காட்சி பார்ப்பது போல கதையில் வருகின்றது.

இந்தக் கதையை படிக்கும் போது சலங்கை ஒலி படத்தை நானும் இரண்டாவது முறை பார்த்து ரசித்த நிகழ்வு என் நினைவிற்கு வந்தது. ரசிகர் மன்றங்கள், ரத்த தானம் செய்யும் நல்ல தகவல் உள்ளது. அவர்களை ஆற்றுப்படுத்தினால் நல்ல செயலில் ஈடுபடுவார்கள் என்ற தகவலும் கதையில் உள்ளது.

நம் நாட்டில் அரசாங்கம் ஒரு கிலோ அரிசி சிலருக்குத் தரும், ஆனால் கழிவறைக் கட்டணம் இரண்டு ரூபாய் வசூலிப்பார்கள், என்ன கொடுமை இது! என்று மனம் நொந்தால், இதற்கு காரணம் உலக வங்கி என்ற காரணத்தை கதையின் நடையிலேயே நமக்கு விளக்கி விடுகின்றார். கண்டனத்தை பதிவு செய்து விடுகின்றார்.

தமிழகம் முழுவதும் கழிப்பிடங்களில் கட்டணம் வசூலிக்கும் அவலம் ஒழிக்கப்பட வேண்டும். வெளிநாட்டவர் சிரிக்கின்றனர் நம்மைப் பார்த்து. காட்சிகள் வர்ணனை மிக நுட்பமாக ரசிக்கும்படி எழுதுகிறார், இதோ!

பால்ச்சாமி பார்த்தான் நல்ல கரும்பு, அண்டங்காக்கா கருப்பில்லை
அட்டக்கரியில்லை, பவுடர் பூசி மாதிரியான வெளிர்க்கரும்பு
லட்சணமான கரும்பு, அவளைப் பார்த்த முதற் பார்வையில்
அவனைக் கவர்ந்தது, செழுமையான கன்னக் கதும்பும்,
குவிந்தமைந்த கச்சிதமான கனிந்த உதடுகளும் தான்,

இதைப் படித்து முடித்தவுடன், கருப்பில் இத்தனை கருப்பா? ‘ கருப்பு தான் எனக்குப் பிடித்த கலரு” என்ற பாடலில் வித்தகக் கவிஞர்
பா .விஜய் எழுதிய பாடல் நினைவிற்கு வந்தது. கம்ப இராமாயணக் காட்சியான அவளும் நோக்கினாள், அண்ணலும் நோக்கினான், நினைவிற்கு வந்தது.

நூல் ஆசிரியருக்கு கிராமிய மொழி நன்கு வருகின்றது. இன்றைக்கு கிராமங்களிலும் ஊடங்களின் தாக்கத்தின் காரணமாக கிராமிய மொழி சிதைந்து வரும் காலத்தில் இக்கதை படிக்கும் போது பண்பாட்டை மக்கள் வாழ்க்ககையை எடுத்து இயம்புவதாக கதை உள்ளது. வாசிக்கும் வழக்கம் வழக்கொழிந்து வரும் காலத்தில் இது போன்ற கதைகளை படிக்கும் போது இதயம் இலகுவாகின்றது. “ வாசிப்பு சுகம்” என்பதை உணர்த்துவதாக இக்கதை உள்ளது. அவருக்கே உரிய தனி நடையில் மிகச் சிறப்பாக எழுதி உள்ளார் பாராட்டுக்கள்.

திருமணமான மறு மாதம் பால்ச்சாமி தன் மனைவி, காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது திடீரெப் போய் அவளைக் கட்டிப் பிடிக்க, “அவள் ஒரு பாம்பை உதறுகிற மாதிரி அவனைத் திமிறி உதறி விட்டு ஓடினாள்” ஏன்? என்று அவன் கேட்கும் போது, அழுது விடுகிறாள், நேரம் காலம் வேண்டாமா? கண்ட நேரத்தில் கண்ட இடத்தில் கட்டி பிடிக்கலாமா? என பிரேமா கேட்கும் போது நமது தமிழ்ப்பண்பாடு, ஒழுக்கம் மேலோங்கி நிற்கின்றது. இப்படி கதை முழுவதும் நிறைய நிகழ்வுகள் வாசகர்களை நெறிப்படுத்தும் விதமாக பல பாடங்கள் கதையில் உள்ளது. இன்றைய இளைய சமுதாயம் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

இன்றைக்கு ஊடகங்கள் போட்டி போட்டு, தமிழ்ப் பண்பாட்டைச் சிதைத்து வரும் காலங்களில், மண் வாசனையோடு மக்களின் வாழ்வை, பண்பாட்டை, கதை வடிவில் பிரசாரம் போல இல்லாமல், மிகவும் இயல்பாக கதை படிக்கும் வாசகர்கள் உள்ளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றார் நூல் ஆசிரியர் மேலாண்மை பொன்னுசாமி.

அவருடைய எழுத்தைப் போலவே அவருடைய உருவமும் மிக எளிமை. சாகித்ய அகதெமி பரிசு வென்றவர் என்ற கர்வம் துளியும் இன்றி மிக இயல்பாக, எளிமையாக வலம் வரும் சிறந்த மனிதர். எழுத்திற்கும், வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாத நல்லவர், வாழ்க பல்லாண்டு!

Please follow and like us:

You May Also Like

More From Author