குய்சோ மாகாணத்திலுள்ள ஹுவாங்பிங் மாவட்டத்தின் குலோங் வட்டத்தில் அக்டோபர் 29ஆம் தேதி லுஷெங் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. உள்ளூர் மியாவ் இன மக்களின் மிகப் பிரமாண்டமான லுஷெங் திருவிழா கொண்டாட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
காலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மியாவ் இன மக்கள் வெள்ளி அலங்கார ஆடைகள் அணிந்து, லுஷெங் என்ற இசைக்கருவியை இசைத்து நடனமாடினர். பின்னர் அவர்கள் முக்கிய வீதிகளில் அணிவகுத்துச் சென்று, தேசிய இன உடைகள் மற்றும் சிறப்பு விவசாய பொருள்களை காட்சிப்படுத்தினர். மாலையில், தொடக்க விழா, பாரம்பரிய மியாவ் இன பாடல் போட்டி, லுஷெங் இசை நிகழ்ச்சி ஆகியவை லுஷெங் சதுக்கத்தில் நடைபெற்றன.
குலோங்கின் லுஷெங் திருவிழா ஹுவாங்பிங் மாவட்டத்தில் நீண்ட வரலாறு உடைய ஒரு பாரம்பரிய திருவிழாவாகும். சமீபத்திய ஆண்டுகளில், ஹுவாங்பிங் மாவட்டம் கலாச்சார சுற்றுலா ஒருங்கிணைப்பு மற்றும் தேசிய ஒற்றுமையில் கவனம் செலுத்தி, கலாச்சார மற்றும் சுற்றுலா துறைகளின் ஆழமான ஒருங்கிணைந்த வளர்ச்சியை தீவிரமாக ஊக்குவித்து வருகின்றது. மேலும் சுற்றுலாத் தொழிலின் உயர்தர வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், இம்மாவட்டத்தில் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் விளையாட்டு தொடர்பான சிறந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.