2026 சட்டசபை தேர்தல் இன்னும் 8 மாதங்களில் நடைபெற உள்ளது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைவதும் உறுதியாகியுள்ளது. சீமான், விஜய்யும் தனித்து போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தவெக சார்பாக விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இன்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-
1.1 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரு கட்சி அடுத்த தேர்தலில் 8.22 சதவீதம் வாக்குகள் பெற்ற அரசியல் கட்சியாக மாறியது தமிழக வரலாற்றில் உண்டா? எல்லா கட்சியும் செத்துப் போய் விடும். கலைந்து ஓடி விடுவார்கள். தவெக விஜய் வருகையால் நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் குறையும் என தகவல்களைப் பரப்புகிறார்கள். இதனால் நான் பயந்து, கூட்டணிக்குப் போய்விடுவேன் என்று எதிர்பார்க்கிறார்கள். அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துத் தான் போட்டியிடும். தேர்தலில் தோற்று, நாம் தமிழர் கட்சி செத்து சாம்பல் ஆனாலும் ஆகுவோமே தவிர தனித்தே போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள், பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே ஒவ்வொரு தேர்தலையும் சந்தித்து வருகின்றன. பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகளே, தமிழ்நாட்டில் கூட்டணியில் இணைந்தே தேர்தல்களைச் சந்தித்து வருகின்றன. நாம் தமிழர் கட்சி தொடக்கம் முதலே தனித்துப் போட்டியிட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சி 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எனினும் 2011 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் நாதக போட்டியிடவில்லை. 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில்தான் முதன்முதலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. அப்போது முதல் தற்போது வரை நாதக கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட்டு வருகிறது. AD கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்த நாம் தமிழர் கட்சிக்கு கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. விவசாயி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்படாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.