திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும், 2026 தேர்தல் கூட்டணி பற்றியும் பல்வேறு அரசியல் கருத்துக்கள் உலா வருகின்றன.
அதில் குறிப்பாக விசிக கட்சி கூட்டணி குறித்த பல்வேறு யூகங்கள் பதிவிடப்பட்டும் சூழலில் தங்கள் கூட்டணி பற்றி பரவும் செய்திகளுக்கு விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் கூட்டணி குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “விசிக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை எழவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியிலும், அகில இந்திய அளவில் I.N.D.I.A கூட்டணியிலும் வெற்றிகரமாக பயணித்து வருகிறோம். இந்த இரு கூட்டணியையும் உருவாக்கியதில் எங்களுக்கும் பங்கு உள்ளது. வெற்றிகரமாக இந்த கூட்டணியை முன்னெடுத்த செல்ல வேண்டிய இந்த சமயத்தில் இக்கூட்டணியை விட்டு இன்னொரு கூட்டணிக்கு செல்வது தேவையற்றது.
இப்படியான சூழலை விசிக மீது சில திட்டமிட்டு சந்தேகத்தை எழுப்பும் முயற்சியை செய்து வருகின்றனர். எங்கள் கூட்டணியை கேள்விக்குள்ளாக்க நினைக்கிறார்கள்.
எங்கள் கூட்டணியில் எந்த ஊசலாட்டமும் இல்லை. எங்கள் கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். இந்த கூட்டணியை சிதறடிக்க வேண்டிய அவசியமில்லை. யாரோ சிலர் போகிற போக்கில் பேசுவதை கொண்டு இந்த கேள்வியை என்னிடம் எழுப்ப வேண்டாம்.
விசிக, 2026-லும் திமுக தலைமையிலான கூட்டணியில் தான் அங்கம் வகிக்கும். இதில் எந்த மாற்றக்கருத்தும் இல்லை.” என விசிக தலைவர் திருமாவளவன் இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறினார்.