தீபாவளி சீட்டு பண்டு நடத்தி 30 பேரிடம் பணமோசடி செய்ததாக சித்தி மகன் மீது சகோதரியே போலீஸில் புகார் அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாணியாஞ்சாவடி புத்தமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவி. இவரது சித்தி மகன் சங்கர், சென்னை மணப்பாக்கம் பகுதியில் சூப்பர் மார்க்கெட் கடை நடத்தி வருகிறார். கடை ஆரம்பித்த ஆரம்ப காலகட்டத்தில் சங்கர் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி சீட்டு முடிவில் அனைவருக்கும் மளிகை பொருட்கள் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து சங்கர் மீண்டும் 2022-2023 ஆம் ஆண்டு தீபாவளி பண்டு சீட்டு நடத்தப் போவதாகவும், சீட்டு முடியும்போது 3 கிராம் தங்க நகை, புடவை, பட்டாசு மற்றும் பரிசு பொருட்கள் தருவதாகவும் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே வாக்குறுதி அளித்தது போல நடந்துகொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் தீபாவளி சீட்டு போட்ட தேவி, தனது உறவினர்கள் நண்பர்கள் என சுமார் 30 நபர்களையும் சகோதரன் சங்கரிடம் தீபாவளி சீட்டில் இணைத்திருக்கிறார்.
மொத்தம் 78 சீட்டுகள் சேர்த்து விட்டு, மாதமாதம் அவர்களிடம் இருந்து பணம் வசூல் செய்து 12 மாதங்களுக்கு 9 லட்சத்து 36 ஆயிரம் பணத்தை சங்கரிடம் கொடுத்திருக்கிறார். ஆனால் சங்கர் சீட்டு முதிர்வடைந்த நிலையில் வாக்குறுதி அளித்ததை போல தங்க நகைகள் மற்றும் பரிசு பொருட்களை தராமல் இழுத்தடிப்பு செய்து வந்துள்ளார்.
அவரிடம் பலமுறை சீட்டு பணம் மற்றும் பரிசு பொருட்கள் குறித்து கேட்டபோது, அவர் தொடர்ந்து இழுத்தடிப்பு வருவதாகவும் குறிப்பிட்டுள்ள தேவி, தன்னை தொடர்ந்து ஏமாற்றி வரும் சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களுடைய பணத்தை மீட்டு தரும்படி புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் நந்தம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் மோசடி மற்றும் சீட்டு மோசடி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தேவி அளித்த புகாரின் அடிப்படையில் சீட்டு மோசடியில் சங்கர் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து நந்தம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் சென்னை மணப்பாக்கம் தர்மராஜபுரம் பகுதியில் உள்ள சங்கர் வீட்டில் அவரை கைது செய்தனர். விசாரணைக்கு பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.