சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரலாறு காணாத கூட்டம் உள்ளதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் ஊர் திரும்புகின்றனர்.
மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி திறக்கப்பட்டது. கார்த்திகை முதல் நாள் முதலே அங்கு வரலாறு காணாத கூட்டம் உள்ளது. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் சபரிமலையில் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அம்மாநில காவல்துறை மற்றும் தேவஸ்தானம் திணறி வருகிறது. பம்பையில் இருந்தே கூட்டம் உள்ளதால் சுவாமி தரிசனம் செய்ய 10 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதன் காரணமாக ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் ஊர் திரும்புகின்றனர்.
இதனிடையே கேரள மாநில கோரிக்கையை ஏற்று அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர், பாதுகாப்பு உபகரணங்களுடன் சபரிமலைக்கு விரைந்துள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த கேரள அரசு உரிய ஏற்பாடு செய்யவில்லை எனவும், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
