15வது சீனச் சர்வதேச விமான மற்றும் விண்வெளிப் பொருட்காட்சி 12ஆம் நாள் செவ்வாய்கிழமை குவாங்டொங் மாகாணத்தின் ஜுஹாய் நகரில் துவங்கியது.
ஏர்ஷோ சீனா (Airshow China) என்று அழைக்கப்படும் இந்த பொருட்காட்சியில் இவ்வாண்டில் மொத்தம் 47 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1022 தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. அவற்றில் வெளிநாட்டு பொருட்காட்சியாளர்களின் எண்ணிக்கை முந்தைய பொருட்காட்சியை விட 104 சதவீதம் அதிகமாகும். ரஷியா, பிரான்ஸ், அமெரிக்கா, சௌதி அரேபியா, இத்தாலி ஆகிய நாடுகள், குழு முறையில் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன.
நடப்புப் பொருட்காட்சியில் மொத்தம் 13 அரங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உள்புற அரங்குகளின் பரப்பளவு 1 லட்சத்து 20ஆயரம் சதுரக்கிலோமீட்டரை எட்டி, முதலாவது பொருட்காட்சியைக் காட்டிலும் 15 மடங்கு அதிகரித்துள்ளது. இதில் குறைந்த உயரத்திலுள்ள பொருளாதாரம், வணிக பயன்பாட்டிற்கான விமானத் தொழில், வணிக ரீதியான விண்வெளி, புதிய பொருள் மற்றும் பயன்பாடு உள்பட 7 கருப்பொருட்கள் உருவாக்கப்பட்டன. தரை, கடல், வான், விண்வெளி, மின்னணு, வலைப்பின்னல் ஆகிய துறைகளைச் சேர்ந்த உயர் தொழில்நுட்பம் மற்றும் அதிநவீனத் தயாரிப்புகள் பொருட்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
சீனாவின் சந்திரன் ஆய்வுத் திட்டத்தில் சாங்ஏ-6 விண்கலன் மூலம் நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் மாதிரிகளும் இப்பொருட்காட்சியில் இடம்பெற்றது. பார்வையாளர்கள் நெருங்கிய தூரத்திலே இந்த மாதிரியை கண்டு ரசிக்க வாய்ப்பு கிடைதுள்ளது.
2024ஆம் ஆண்டு, குறைந்த உயரத்திலுள்ள பொருளாதாரத்தின் ஆரம்ப ஆண்டு என பொதுவாக கருதப்படுகிறது. நடப்புப் பொருட்காட்சியில், ஆளில்லா விமானங்கள், ஆளில்லா கப்பல்கள் ஆகியற்றின் பொருட்காட்சிக்கு வைக்கப்படும் சிறப்பு மண்டலம் முதல்முறையாக அமைக்கப்பட்டது.
குறைந்த உயரத்திலுள்ள பொருளாதாரம் என்ற கருப்பொருளைக் கொண்ட அரங்கத்திலேயே, பல அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகள் மற்றும் பயன்பாட்டு காட்சிகளை அறிமுகம் செய்துள்ளன. விமானந்தாங்கி வாகனம் என்ற தயாரிப்பு மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஏர்ஷோ சீனா இவ்வாண்டில் நவம்பர் 12ஆம் நாள் முதல் 17ஆம் நாள் வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.