குவங்ஜோ மாநகரில் சமீபத்தில் நிறைவடைந்த 21ஆவது சீன சர்வதேச வேளாண் வர்த்தகக் கண்காட்சியில் கிடைக்கப்பெற்ற ஒப்பந்தங்களின் மதிப்பு 2360 கோடி யுவானை எட்டியுள்ளது. 1 லட்சம் பார்வையாளர்களையும் 50 ஆயிரம் கொள்முதலாளர்களையும் இக்கண்காட்சி ஈர்த்துள்ளது.
வேளாண் துறையை வலுப்படுத்துவது தொடர்பான மன்றக் கூட்டமும், வறுமை ஒழிப்பில் இருந்து மீண்ட பகுதிகளில் வேளாண் உற்பத்திப் பொருள்களை பெருக்குவது தொடர்பான ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் இக்கண்காட்சியில் நடைபெற்றன.
இக்கண்காட்சியின் ஒரு பகுதியாக சர்வதேச ஒத்துழைப்பு கண்காட்சிப் பிரிவில் கஜகஸ்தான் உள்ளிட்ட 15 நாடுகளின் 60 நிறுவனங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
நடப்பாண்டு கண்காட்சியின் கௌரவ விருந்தினராக கஜகஸ்தான் பங்கேற்றது. தானியங்கள் மற்றும் எண்ணெய் பதப்படுத்துதல், கால்நடை வளர்ப்பு மற்றும் தீவன உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பில் சீனா-கஜகஸ்தான் இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.