டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர்.
டெல்லி ரயில் நிலையத்தில் நடைமேடை 13,14,15 -ல் நின்றிருந்த உத்தரப்பிரதேசம் செல்லும் ரயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு டெல்லி எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், 3 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. தொடர்ந்து காயமடைந்தவர்களுக்கு உரிய
சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி ரயில்நிலைய நெரிசலில் சிக்கி 18 பேர் பலியானது குறித்து பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவதாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.