சிற்றுந்துகள் திட்டத்தால் 1 கோடி மக்கள் பயணம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்

Estimated read time 1 min read

தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளவது

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள சிற்றுந்துகள் திட்டத்தால், 3,103 வழித்தடங்களில் உள்ள இதுவரை பஸ் வசதி கிடைக்காத 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயணம் செய்து அளவில்லாத மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். இத்திட்டம் பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர் தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கினார்கள். இந்தியாவில் பேருந்து வசதிகளில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு எனும் பெருமை அதன் மூலம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் கடந்த 1997-ஆம் ஆண்டு பேருந்து வசதி பெறாத குக்கிராமங்களில் வாழும் மக்கள் பேருந்து வசதி பெறும் நோக்கில், சிற்றுந்து திட்டம் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, மாவட்டத்துக்கு 250 சிற்றுந்துகளுக்கு அனுமதி என்ற அடிப்படையில், பேருந்துகள் இயக்கப்படாத வழித்தடத்தில் 16 கி.மீ. மற்றும் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடத்தில் 4 கி.மீ. என மொத்தம் 20 கி.மீ. என்ற அளவில் வழித்தடம் நீட்டிப்பு செய்து சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

சிற்றுந்துகள் திட்டம் தொடர்பான தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் 2024 ஜூலை 22 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டங்களில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் தொழில் சார்ந்த பல்வேறு தரப்பினர் தெரிவித்த ஆலோசனைகள் அடிப்படையில் புதிய விரிவான சிற்றுந்துகள் திட்டம் 2024 குறித்து ஜனவரி 23 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வெளியிடப்பட்ட அறிக்கையில் மறுபடியும் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு, மே 28-ம் தேதி புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பின்படி, இத்திட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட குக்கிராமங்களை நகரப் பகுதிகளுடன் இணைக்கும் விதமாக, அதிகபட்ச வழித்தட தொலைவை 25 கி.மீ. ஆக உயா்த்தி வழித்தட நீட்டிப்பு செய்து, அதில் பேருந்து இயங்காத வழித்தடங்களில் குறைந்தபட்சம் 65 சதவிகிதம் என இயக்க வழிவகை செய்யப்பட்டு முக்கிய அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்குச் சென்று மக்களை இறக்கிவிட ஏதுவாக மேலும் 1 கிலோ மீட்டர் தூரம் வரை சிற்றுந்துகளை இயக்கிடவும் வழிவகை செய்யப்பட்டது.

இதன்படி, தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 94 புதிய வழித்தடங்கள் மற்றும் புதிய திட்டத்துக்கு மாறுதல் செய்யப்பட்ட 1,009 வழித்தடங்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 103 வழித்தடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயன்பெறத்தக்க வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின்படி சிற்றுந்துகள், பேருந்து நிறுத்தங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படவும், நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது சிற்றுந்து இயக்கி வருபவா்கள் புதிய திட்டத்துக்கு மாற்றம் பெற்று இயக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தினை ஜூன் 16-ம் தேதி தஞ்சாவூரில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதுவரை, பேருந்துகளை தங்கள் கிராமத்தில் காணாத மக்கள் எல்லாம் கண்டு மகிழ்ந்து பரவசம் அடையும் வகையில் சிற்றுந்துகள் கிராமப்புறங்களில் பயணிக்கத் தொடங்கிவிட்டன. இந்த சிற்றுந்துகள் தங்களுடைய கிராமத்திற்கு வந்ததும் மூதாட்டி ஒருவர் தரையில் விழுந்து தலைவணங்கி பேருந்தை வரவேற்றார். வேறு சிலர் பேருந்து வந்த வழித்தடத்தில் கற்பூரம் ஏற்றி மகிழ்ந்து வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

திருத்தணியிலிருந்து தும்பிக்குளத்திற்குப் புதிதாக இயக்கப்பட்ட சிற்றுந்தில் பயணம் செய்த ஒரு பெண், “நான் தும்பிக்குளம் கிராமத்தில் வசித்து வருகிறேன். விவசாயக் கூலி தொழிலாளியான நான், நாள்தோறும் வேலைக்குச் செல்லும்போது பஸ் வசதி இல்லாததால், நடந்தே வேலைக்குச் சென்று அவதிப்பட்டு வந்தேன். தற்போது சிற்றுந்து சேவை தொடங்கியிருப்பதால், இதில், பாதுகாப்பாக வேலைக்குச் சென்று மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் கிராமத்திற்கு சிற்றுந்துகள் திட்டத்தைச் செயல்படுத்திய முதல்வருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள இந்த சிற்றுந்து திட்டத்தால், தமிழக மக்களுக்கு பேருந்து இயக்கப்படாத 25 ஆயிரத்து 708 கி.மீ. தொலைவுக்கு புதிதாக பேருந்து வசதி கிடைக்கப்பெற்றுள்ளதுடன், ஏறத்தாழ 1 கோடி மக்கள் சிற்றுந்தில் பயணம் செய்து அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறார்கள். இத்திட்டம் பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author