திருச்செந்தூர் திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஏற்பாடுகள் ஆட்சியர் நேரில் ஆய்வு

Estimated read time 1 min read

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற 07.07.2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் திருப்பணிகள், வேள்விச்சாலை அமைக்கும் பணிகள், பக்தர்கள் பாதுகாப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக தடுப்பு அமைக்கும் பணிகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் பணிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற 07.07.2025 அன்று வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கான வேள்விச்சாலை பூஜைகள் 01.07.2025 முதல் நடைபெறுகிறது. திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுக்கப்படுகிறது. எனவே, திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா காலங்களில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அதன்படி, திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் திருப்பணிகள், வேள்விச்சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு, திருப்பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்கள்.

திருக்கோயில் வளாகம் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் பக்தர்கள் பாதுகாப்பாக நின்று சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக தடுப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், குடிநீர் வசதிகள், சுகாதார வசதிகள், அகன்ற எல்இடி திரைகள் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ள இடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்கள்.


மேலும், பக்தர்களின் அவசர மருத்துவ உதவிகளுக்கு தேவையான மருத்துவ சேவைகள் அளிக்கும் வகையில் திருக்கோயில் வளாகம் மற்றும் கடற்கரைப் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படவுள்ள இடத்தினையும், பக்தர்கள் எளிதாக வந்து செல்வதற்கு ஏதுவாகவும், அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை வசதிகள் அளிக்கும் வகையில் வாகனம் வந்து செல்வதற்கு ஏதுவாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ள வழித்தட வசதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தொடர்ந்து, வேள்விச்சாலை அருகில் அமைக்கப்படவுள்ள மர கேலரி மற்றும் ராஜகோபுரம், விமானங்களில் அமைக்கப்படும் படிசாரங்களை (Watch Tower, T.V. Tower) மற்றும் பல்வேறு இடங்களில் அமைக்கப்படவுள்ள இரும்பிலால் ஆன தடுப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்து, தேவையான ஆலோசனைகளை வழங்கி உறுதித்தன்மை சான்று வழங்க பொதுப்பணித்துறையினரை கேட்டுக் கொண்டார்.


மேலும், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் இதர பணிகள் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்காக துணை ஆட்சியர் நிலையிலான 07 அலுவலர்களும், 30 வட்டாட்சியர்களும், நகராட்சி ஆணையாளர்கள், நகராட்சிப் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார அலுவலர்கள், நகரமைப்பு ஆய்வாளர்கள் மற்றும் நகரமைப்பு அலுவலர்கள் என 100 அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் மேற்கொள்வதை கண்காணித்திடும் வகையில் 05 தனி மாவட்ட வருவாய் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு தேவையான இடங்களில் அன்னதானம் வழங்குவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள். மேலும், தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள், தற்காலிக பேருந்து நிலையங்களில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சுகாதார வசதி, நிழற்பந்தல், குடமுழுக்கு நிகழ்ச்சியினை பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில் அகன்ற எல்இடி திரை வசதிகள் மற்றும் தேவையான இடங்களில் எல்இடி விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளை திட்டமிட்டப்படி உரிய காலத்திற்குள் முடித்திட வேண்டும்.
அதுபோன்று, மேற்கண்ட இடங்களிலிருந்து சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகைதரும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பக்தர்கள் அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் தேவையான இடங்களில் நிழற்பந்தல் அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்கள். எனவே, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இந்த ஆய்வின்போது தெரிவித்தார்.

ஆய்வின் போது, தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் சரவணக்குமார் (நெடுஞ்சாலைகள் சிவசுப்பிரமணியன் (நிலஎடுப்பு, உடன்குடி), திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author