திருவள்ளூர் மாவட்டம், சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது பள்ளியின் கூரைஓடு இடிந்து விழுந்ததில், 5 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
தமிழ்நாட்டில் 21 ஆயிரத்து 136 ஒன்றிய மற்றும் நடுநிலை தொடக்கப் பள்ளிகளின் வகுப்பறைகளைக் கட்டவும், மேம்படுத்தவும், தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு ரூ. 240 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், நடப்பாண்டில் ரூ. 800 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போது, பள்ளி கட்டிடத்தின் ஓடுகள் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 5 குழந்தைகளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, காயமடைந்த குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடத்தைக் கடந்த ஆண்டும் அரசு கண்டு கொள்ளவில்லை. இந்த ஆண்டும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இது போன்ற, கட்டங்களின் உறுதி தன்மை கண்காணிப்பது யார்? அதற்குப் பொறுப்பு ஏற்பது யார்? குழந்தைகளின் பாதுகாப்புக்கு என்ன உறுதி ? அலட்சியத்திற்கு யார் காரணம்? என சமூக ஆர்வலர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், இந்த பள்ளியின் கட்டடிம் உடனே கட்டப்பட வேண்டும் என்றும், படுகாயமடைந்த குழந்தைகளுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.