தமிழக அரசு பள்ளிகளில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், தங்கள் பணியை நிரந்தரமாக்க வேண்டும் எனக் கோரி நீண்டகாலமாக போராடி வருகின்றனர். இவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் பணியாற்றுகிறார்கள். இதற்காக மாதம் ரூ.12,500 தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் திமுகவால் இந்த ஆசிரியர்கள் பணிநிரந்தரமாக்கப்படுவார்கள் என வாக்குறுதி வழங்கப்பட்டதாலும், ஆசிரியர்கள் தற்போது அதைப் அமல்படுத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கான ஒரு நடவடிக்கையாக நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகம் அருகே, பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த ஜூலை 8-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் உறுதிபட தெரிவித்துள்ள நிலையில், தற்போது அரசு தரப்பிலிருந்து முக்கியமான விளக்கம் ஒன்று வெளியாகியுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரிடம் வழங்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் போராட்டத்தில் முன்வைத்த கோரிக்கைகள் மீது அதிகாரிகள் விவாதித்துள்ளனர். விரைவில் இவர்களுக்கு நல்ல செய்தி வரும்” எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கை உருவாகி வருகிறது.