தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 4, 2025) தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையைத் தொடங்கி வைக்கிறார். வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16,000 கோடி முதலீட்டில் இந்தத் தொழிற்சாலையை அமைத்துள்ளது, இது முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஆலை ஆண்டுக்கு 1.50 லட்சம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது, மேலும் வி.எஃப்-6 மற்றும் வி.எஃப்-7 வகை கார்களை உற்பத்தி செய்யும். இத்தொழிற்சாலை மூலம் 3,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும், மேலும் இலங்கை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
இன்று காலை 9 மணிக்கு தூத்துக்குடி வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதன்பின் புறவழிச் சாலை வழியாக சில்லாநத்தம் சென்று அங்கே வின் பாஸ்ட் கார் தொழிற்சாலை விற்பனையை துவங்கி வைக்கிறார்.
அதன்பின், மாணிக்கம் மஹாலில் நடைபெறும் பல்வேறு நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் விமான மூலம் சென்னை செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
