காங்கிரஸ்-திமுக பத்து ஆண்டு கால ஆட்சிக்கும், நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பத்து ஆண்டு கால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம்தான், ஊழல் கட்சிகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், மண்டலத் தலைவர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பதவியேற்பது உறுதி என்ற முடிவை நன்கு அறிந்து, இந்தத் தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த 2004 – 2014 வரையிலான பத்து ஆண்டு கால, காங்கிரஸ், திமுக மற்றும் இருபது, முப்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட பிற மாநிலக் கட்சிகள் அங்கம் வகித்த கூட்டணி அரசு, நமது நாட்டைக் கூறு போட்டு அழித்துக் கொண்டிருந்தன.
வலிமையான பிரதமர் இல்லாமல், அனைத்துத் துறைகளிலும் 2G உள்ளிட்ட ஊழல்கள் மட்டுமே நடைபெற்றன. காங்கிரஸ் திமுக ஆட்சியில், வளர்ச்சியில் நமது நாடு சுமார் 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டது. நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, கடந்த பத்து ஆண்டுகளில் நமது நாடு பெரிதும் வளர்ந்திருக்கிறது.
காங்கிரஸ்-திமுக பத்து ஆண்டு கால ஆட்சிக்கும், நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பத்து ஆண்டு கால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம்தான், ஊழல் கட்சிகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். இத்தனை ஆண்டு காலமாக மத்திய அரசு நிதி ஒதுக்கியும் சீரமைக்கப்படாத நமது நொய்யல் நதி, கோவை பாராளுமன்ற உறுப்பினராக மக்கள் அன்பைப் பெற்று நான் தேர்ந்தெடுக்கப்பட்டதும், மத்திய அரசின் உதவியோடு முழுவதுமாக மீட்டெடுக்கப்படும். ஒரு வலிமையான பிரதமர் தலைமையில், நமது நாடு வேகமாக வளர்ச்சி பெறும் என்பது, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, கோயம்புத்தூரின் வளர்ச்சிக்காக, தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 400க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பதை, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் அத்தனை தொகுதிகளிலும் உறுதி செய்வோம் எனத் தெரிவித்தார்.