இந்த சூழலில் இப்போது இங்கிலாந்தைச் சேர்ந்த டானியல் ஜாக்சன் என்பவர், தான் புதிதாக ‘ரிப்பளிக் ஆஃப் வெர்டிஸ்’ (Republic of Verdis) என்ற நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்துள்ளார்.
நித்தியானந்தாவின் கைலாசாவைப் போல் அல்லாமல், இந்த நாட்டைப் பற்றிய தெளிவான விளக்கத்தையும் அவர் கொடுத்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள டான்யுப் நதிக்கரையில், இதுவரை எந்த நாடும் உரிமை கொண்டாடாத 125 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட காடுதான் இந்த ரிப்பப்ளிக் ஆஃப் வெர்டிஸ் (வெர்டிஸ் குடியரசு) நாட்டுக்கு சொந்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 400 பேர் என்றும், இந்த நாட்டுக்கு தான்தான் அதிபர் என்றும் அறிவித்திருக்கிறார் டானியல் ஜாக்சன்.
டிஜிட்டல் டிசைனராக இருக்கும் டானியல் ஜாக்சன், இந்நாட்டுக்கென தனி இணையதளத்தையும் நடத்தி வருகிறார்.
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த இவர், 14 வயது முதல் தான் கண்ட கனவை நனவாக்கும் வகையில் இந்த நாட்டை உருவக்கியுள்ளதாக கூறுகிறார்.
டானியல் ஜாக்சன், அதன் கொடி, நாணயம், கேபினட் அமைச்சரவை ஆகியவற்றையும் அறிவித்துள்ளார்.
இந்த கொடியை 2 நாட்களுக்கு முன் அவர் அறிமுகப்படுத்தி உள்ளார்.
மேலும் இந்த நாட்டில் வசிக்கத் தகுதியான 400 பேரை தேர்வு நடத்தி தேர்ந்தெடுத்துள்ளார்.
இந்த நாட்டில் குடிபெயர விரும்பி மொத்தம் 15 ஆயிரம் பேர் தேர்வு எழுதியிருக்கிறார்கள். அதிலிருந்துதான் 400 பேரை தேர்ந்தெடுத்துள்ளார் டானியல் ஜாக்சன்.
இதன்படி ஐரோப்பிய நாணயமான யூரோதான் இந்த புதிய நாட்டுக்கும் நாணயமாக இருக்கப் போகிறது.
வெர்டிஸ் நாட்டின் சட்டப்படி ஆங்கிலம், க்ரொவேஷியன், செர்பியன் ஆகிய 3 மொழிகள் அந்நாட்டின் அலுவல் மொழிகளாக இருக்கப் போகின்றன.
இந்த குட்டி நாட்டுக்கு நாம் செல்ல வேண்டுமானால் முதலில் குரோஷியா நாட்டுக்கு செல்ல வேண்டும். அந்நாட்டில் உள்ள ஓசிஜெக் என்ற நகரத்தில் இருந்து படகு மூலம்தான் நாம் வெர்டிஸ் குடியரசு நாட்டுக்குள் போக முடியும்.
வெர்டிஸ் குடியரசு நாட்டை ஜாக்சன் அறிவித்தாலும் அதை பக்கத்தில் உள்ள நாடான குரோஷியா இன்னும் அங்கீகரிக்கவில்லை.
கடந்த 2023-ம் ஆண்டு டானியல் ஜாக்சன் உள்ளிட்ட சிலரை கைது செய்த குரேஷிய அரசு, அங்கிருந்து அவர்களை நாடு கடத்தியது.
இதைத்தொடர்ந்து இப்போது நாடு கடந்த அரசாங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறார் டானியல் ஜாக்சன்.
இந்த நாட்டை மற்ற நாடுகள் அங்கீகரிக்கும் பட்சத்தில் உலகின் 2-வது குட்டி நாடு என்ற பெருமை இதற்கு கிடைக்கும்.
இந்தப் பட்டியலில் வாடிகன் நகரம் முதல் இடத்தில் இருக்கிறது.
– பி.எம்.சுதிர்