2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்து தான் தொடங்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். ரூ.949 கோடியே 53 லட்சத்தில் 61 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்த அவர், ரூ.182 கோடியே 6 லட்சத்தில், 35 புதிய திட்டப் பணிகளுக்களுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ரூ.295 கோடியே 29 லட்சத்தில் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சினிமா துறையில் 10,000 பாடல்களை எழுதிய கவிராயர் உடுமலை நாரயணகவி, அரசு கலைக் கல்லூரி அமைய காரணமாக இருந்த திமுக முன்னாள் அமைச்சர் சாதிக்பாட்ஷா உள்ளிட்டோரை தந்தது உடுமலை மண். இயற்கை, இலக்கியம், கல்வி, அரசியல் என பல துறைகளிலும் கோட்டையாக உடுமலைப்பேட்டை இருந்து வருகிறது.
திமுக ஆட்சி காலங்களில் தான் மேற்கு மண்டலத்துக்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மேற்கு மண்டலத்தை சேர்ந்தவர் என தன்னை காட்டிக்கொண்டபோதும், அதிமுக ஆட்சிக் காலத்தில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. ஆனால் திராவிட மாடல் அரசு இப்பகுதிக்கான வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து செய்யும். 2026 தேர்தல், நிச்சயமாக அதிமுகவின் தேர்தல் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்து தான் தொடங்கப் போகிறது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் நலத்திட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் சென்றனர். நீதிமன்றம் சிவி சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து, நீதிமன்றங்களை அரசியல் மேடையாக ஆக்காதீர்கள் என கூறியது. இது அவர்களுக்கு கேவலமாக இல்லையா? அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக அரசு அளித்துள்ள பட்டியல் படி முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.
என்னை பொருத்தவரை பேச்சைக் குறைத்துக்கொண்டு செயலில் காட்ட வேண்டும். அந்த வகையில் பிஏபி பாசன விவசாயிகளின் கோரிக்கையான நீரார்- நல்லார் அணைத்திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும். இது தொடர்பாக ஏற்கெனவே கேரளா, தமிழகம் ஆகிய இரு மாநில அரசு துறைகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பிஏபி திட்டத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள பாசன கால்வாய்களை தூர் வார இந்த ஆண்டே ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். திருப்பூர் மாநகரில், ரூ.9 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம், ரூ.5 கோடி செலவில் பல்நோக்கு விளையாட்டரங்கம், காங்கயம் பகுதியில் குடிநீர் வடிகால் பணிகளுக்காக ரூ. 11 கோடி, தாராபுரம் அருகே உப்பாற்றின் குறுக்கே ரூ.7.5 கோடியில் தடுப்பணை, ஊத்துக்குளியில் ரூ.6.5 கோடி செலவில் வெண்ணெய் தொழிற்சாலை, உடுமலையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சாதிக்பாட்ஷா பெயர், பைபாஸ் சாலைக்கு சூட்டப்படும். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை செயல்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.