பாமக செயற்குழு கூட்டம் இன்று திண்டிவனத்தில் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் அன்புமணி தலைமையில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும், கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. முன்னதாக தான் தான் கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனர் என்றும், என் மூச்சு உள்ளவரை நானே பதவி வகிப்பேன் என்றும் ராமதாஸ் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதன் தொடர்ச்சியாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி அறிவிப்பு வெளியிட்டார் ராமதாஸ். அத்தோடு இன்று திண்டிவனம் பகுதியில் பாமக செயற்குழு கூட்டம், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திண்டிவனத்தில் நடைபெற உள்ள ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு கூட்டத்திற்கு போட்டியாக, சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை, தியாகராயர் நகரில் இன்று காலை 10 மணியளவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி தரப்பு நிர்வாகிகளான பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலக பாமா, வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
நேற்று முன்தினம் பாமக தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நிக்கி , 19 பேர் அடங்கிய புதிய உறுப்பினர்கள் அடங்கிய குழுவை ராமதாஸ் அறிவித்த நிலையில் , வழக்கமாக கட்சி அறிவிப்புகளின் நகல்கள் பெறுபவர்களின் பட்டியலிலும் அன்புமணி பெயர் இடம்பெறவில்லை. இந்தநிலையில் இன்று அன்புமணி தலைமையில் நிர்வாக குழு கூட்டமானது நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.