இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது கௌஹாத்தி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 22-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியானது தங்களது முதல் இன்னிங்சில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 489 ரன்களை குவித்தது.
4 ஆவது அதிவேக இந்திய வீரராக ஜெய்ஸ்வால் நிகழ்த்திய சாதனை :
பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 201 ரன்களுக்கு சுருண்டது. அதனால் 288 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் குவித்த வேளையில் டிக்ளர் செய்தது.
இதன் காரணமாக 549 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மாபெரும் இலக்கினை துரத்தி தற்போது இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் 58 ரன்கள் அடித்த இந்திய அணியின் துவக்க வீரரான ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்சில் 20 பந்துகளை சந்தித்து 1 பவுண்டரி, 1 சிக்சர் என 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் அவர் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 2 ரன்களை அடித்தபோது சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் நான்காவது அதிவேக இந்திய வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியிருந்தார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 2500 ரன்களை பூர்த்தி செய்த இந்திய வீரராக முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் 47 இன்னிங்ஸ்களில் 2500 ரன்களை அடித்து முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து கெளதம் கம்பீர் 48 இன்னிங்ஸ்களிலும், ராகுல் டிராவிட் 50 இன்னிங்ஸ்களிலும் 2500 ரன்கள் கடந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் விளையாடிய 53-வது இன்னிங்சில் 2500 ரன்களை பூர்த்தி செய்து சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 2500 ரன்கள் கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
