திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அதன்பிறகு ஏராளமான திரைப்படங்கள், வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் என தொடர்ந்து 50 ஆண்டுகளாக சினிமாவில் உச்சநட்சத்திரமாக கோலோச்சி வருகிறார். சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினி, தனது 171வது படமான ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் நேற்று உலகமெங்கும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்துக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ரஜினிகாந்த், சுதந்திர திவ வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அனைவருக்கும் 79வது சுதந்திர தின நல்வாழ்த்துகள். எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமான மாண்புமிகு திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார், தினகரன், பிரேமலதா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும் கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
