இவ்வாண்டு, சீன மக்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80வது ஆண்டு நிறைவாகும். சீன வீரர்கள், தங்கள் குடும்பத்தினர்களுக்கு எழுதிய கடிதங்கள் மூலம், நாட்டின் அபாயகரமான வேளையில், நாட்டு மக்களின் நம்பிக்கையையும் பொறுப்பையும் உணர்ந்து கொள்ளலாம்.
டை அன் லன் என்ற வீரர் தனது மனைவிக்கான கடிதம்:
அன்புள்ள ஹே ஷி(மனைவி பெயர்):
நான் இப்போது கட்டளைப்படி இந்த நாட்டைக் காப்பாற்றப் போகிறேன். மேல்நிலைத் திட்டங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பின்புறத் தகவல்தொடர்புகளும் மிகத் தொலைவில் உள்ளன. எதிரியின் நடவடிக்கைகள் வேகமாக உள்ளதால், இப்போது நான் தனியாகப் போராடுகிறேன். நம் நாடு எனக்கு அளித்த வளர்ப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, என் உயிரையே தியாகம் செய்ய உறுதியாகியிருக்கிறேன். நாட்டுக்காக போரில் மரிப்பது மிகுந்த பெருமைக்குரிய செயல்!
நான் மனதில் நினைப்பது ஒன்று: அம்மாவை வாழ்நாளில் நான் பார்த்துக்கொள்ள முடியாமல் போனது. இனி உங்களுக்கும் குழந்தைகளுக்கும் வாழ்க்கை இன்னும் கடினமாக இருக்கும். ஆனால் நம் நான்கு குழந்தைகள் அனைவரும் அறிவாளிகள். வருங்காலத்தில் அவர்கள் நிச்சயம் சிறந்து விளங்குவார்கள். இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே நீங்கள் கஷ்டப்பட வேண்டும். பிறகு நல்ல காலம் வரும்.
என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள். கடந்த ஆண்டு நான் உங்களுக்கு ஏற்படுத்திய துன்பங்களுக்கு மன்னிக்கவும்.
இப்போது எதிரிகளை எதிர்கொள்ளக் கூடிய ஏற்பாடுகளில், ஈடுபட வேண்டியுள்ளது. நேரம் மிகக் குறைவு. தயவு செய்து உங்கள் ஆரோக்கியத்தைக் கவனியுங்கள். குழந்தைகளை அன்பாக வளர்த்தெடுங்கள். அம்மாவைக் கவனித்துக் கொள்ளுங்கள். இந்தத் தகவலை அப்பாவுக்குத் தெரிவிக்க வேண்டாம்.
இதோடு,
டை அன் லன்
லிங் ச்சி ச்சாங் என்ற வீரர் தனது பெற்றோருக்குக் கடிதம்:
அன்புள்ள அம்மா, அப்பாவுக்கு,
உங்களிடமிருந்து பிரிந்தபின் ஒரு கடிதம்கூட வரவில்லை. மிகவும் கவலைப்பட்டேன். தங்களிருவரும் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா? இன்று அப்பாவின் கடிதம் கிடைத்தது. வீட்டில் அனைவரும் நலமாயிருப்பது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி!
நான் இப்போது எதிரி படையின் பின்பகுதியில் பணியாற்றுகிறேன். தினமும் பயிற்சியும் பாடங்களும் நடக்கின்றன. வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வீட்டில் இருந்தபோதைவிட உடல் பலமாகியிருக்கிறேன்.
நாட்டுக்காக, ஒவ்வொரு மனிதனும் எழுந்து நின்று ஜப்பானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட வேண்டும்! சுதந்திரமான புதிய சீனாவை நிறுவ வேண்டும்! வராத கடிதங்கள் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
இந்த தேசிய நெருக்கடி நேரத்தில், ஜப்பானியர்களை சீனாவிலிருந்து விரட்டியடிக்கும் வரை, நான் வீடு திரும்ப மாட்டேன். இப்போது விடுமுறை எடுக்க முடியாது. தயவு செய்து கவலைப்படாதீர்கள்.
இதோடு,
லிங் ச்சி ச்சாங்