ஜப்பான் தனது ஆக்கிரமிப்பு வரலாற்றை அறிந்துகொள்ளாவிடில் வரலாற்றில் நிகழ்ந்த தவற்றை திரும்ப செய்ய நேரிடும் என்று அந்நாட்டின் அரசு சாரா அமைப்பின் தொண்டர் ஒருவர் தெரிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற 2ஆவது உலகப் போரின் போது ஜப்பானிய இராணுவப் படையின் கொடுமைகளை வெளிப்படுத்தும் கண்காட்சி ஒன்றில், அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
வரலாற்றை நினைகூரும் பொருட்டே கடந்த 10 ஆண்டுகாலமாகத் தொடர்ந்து இந்தக் கண்காட்சியை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 2ஆவது உலகப் போர் நிறைவடைந்த 80 ஆண்டுகளுக்குப் பிந்தைய இன்று, ஜப்பான் நிபந்தனையற்ற முறையில் சரணடைந்ததை நினைவுகூரும் போது இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த வரலாற்றை மீளாய்வு செய்து, அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதோடு இன்றைக்குரிய அமைதியைப் பேணிமதிக்க வேண்டும். 2ஆவது உலகப் போரின் போது, ஜப்பானிய பாசிச ஆதிக்கவாதிகளால் தொடங்கப்பட்ட படையெடுப்பும், காலனி ஆட்சியும் பல நாடுகளுக்குக் கடும் துன்பங்களை ஏற்படுத்தின. இதில், சீன மக்களின் எதிர்ப்புப் போர் மிக முன்னதாகத் தொடங்கி, மிக நீண்ட காலம் நீடித்தது. மேலும், இந்த எதிர்ப்புப் போரில் 3 கோடியே 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் அல்லது காயமடைந்தனர்.
1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள், பொட்ஸ்டேம் அறிக்கையை ஏற்றுக்கொண்டு, ஜப்பான் நிபந்தனையற்ற முறையில் சரணடைவதாக அறிவித்தது. இது, சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போரும் உலக பாசிச எதிர்ப்புப் போரும் முழு வெற்றி பெறுவதைக் குறிக்கிறது என்பது நினைவு கூரத்தக்கதாகும்.
