சென்னை : சென்னை கண்ணகி நகரில் இன்று அதிகாலை தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த வரலட்சுமி (30) என்ற பெண் தூய்மைப் பணியாளர், மழைநீரில் அறுந்து விழுந்த மின்கம்பியால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தொடர் மழையால் சாலையில் தேங்கியிருந்த நீரில் மின்சார கேபிள் அறுந்து விழுந்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது. இச்சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதோடு, பொதுமக்கள் மற்றும் வரலட்சுமியின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்பொழுது, தமிழ்நாடு அரசு வரலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது, இதில், மின்சார வாரியம் சார்பில் ரூ.10 லட்சமும், தனியார் தூய்மைப்பணி ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்படுகிறது. மேலும், அவரது குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் எனவும், வரலட்சுமியின் கணவர் ரவிக்கு ஒப்பந்த நிறுவனத்தில் வேலை வழங்கப்படும் எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதியளித்தார்.