தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு 8 நாள்களில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
சென்னையில் தொடங்கி சென்னையில் முடியும் இந்த 8 நாள்கள் சுற்றுலா, வாரத்தின் சனிக்கிழமை காலையில் தொடங்கி அடுத்த வாரம் சனிக்கிழமை மாலையில் நிறைவடையும்.
முதலாம் நாள் – புதுச்சேரி, பிச்சாவரம், சிதம்பரம்
சனிக்கிழமை காலை 7 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளாகத்தில் இருந்து சுற்றுலா பேருந்து புறப்படும். மாமல்லபுரத்தில் காலை உணவுக்கு ஏற்பாடு செய்யப்படும். தொடங்கு காலை 11 மணிக்கு புதுச்சேரி சென்று அங்கு கடற்கரை மற்றும் அரவிந்தர் ஆசிரமத்திற்கு செல்லலாம்.
மதியம் 1 மணிக்கு கடலூரில் மதிய உணவை முடித்துவிட்டு பிச்சாவரம் புறப்படலாம். மதியம் 3 மணிக்கு பிச்சாவரத்தில் போட்டிங் செய்துவிட்டு, சிதம்பரம் புறப்படலாம். மாலை 5 மணிக்கு சிதம்பரம் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொள்ளலாம். அங்கிருந்து புறப்பட்டு திருக்கடையூர் செல்லலாம். அங்குள்ள ஓட்டல் தமிழ்நாட்டில் இரவு உணவை முடித்து, அங்கேயே தங்கலாம்.
2ம் நாள் – நாகூர், வேளாங்கண்ணி, தஞ்சை
ஞாயிறு அன்று காலை 9.30 மணிக்கு காலை உணவை முடித்துக்கொண்டு நாகூர் தர்காவுக்குச் செல்லலாம். காலை 11.30 மணிக்கு வேளாங்கண்ணி தேவாலயம் சென்று வழிபாடு மேற்கொள்ளலாம். மதியம் 1.30 மணிக்கு தஞ்சைக்கு செல்லும் வழியில் மதிய உணவை முடித்துக்கொண்டு மாலை 5.30 மணிக்கு தஞ்சை பெரிய கோவில் செல்லலாம். அதன்பின், தஞ்சையில் இரவு உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும்.
3ஆம் நாள் – ராமேஸ்வரம்
திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு தஞ்சையில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் செல்லலாம். காலை உணவு தஞ்சையில் ஏற்பாடு செய்யப்படும். மதியம் 2.30 மணிக்கு ராமநாதசுவாமி திருக்கோவிலில் தரிசனம் முடித்து பின்னர் மதிய உணவு ஏற்பாடு செய்யப்படும். அன்றிரவு ராமேஸ்வரத்தில் உள்ள ஓட்டல் தமிழ்நாட்டில் இரவு உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும்.
4ஆம் நாள் – பாம்பன் பாலம், கன்னியாகுமரி
செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு காலை உணவை முடித்துக்கொண்டு பாம்பன் பாலத்தை பார்வையிடுவீர்கள். அங்கிருந்து கன்னியாகுமரி புறப்படுவீர்கள். திருநெல்வேலியில் மதியிம் 1.30 மணிக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்படும். மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி கோவிலில் தரிசனம் முடித்து, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அன்றிரவு கன்னியாகுமரியில் உள்ள ஹோட்டல் தமிழ்நாட்டில் இரவு உணவும், தங்குமிடமும் ஏற்பாடு செய்யப்படும்.
5ஆம் நாள் – சுசீந்திரம், மதுரை
புதன்கிழமை காலை 8.30 மணிக்கு காலை உணவை முடித்துக்கொண்டு சுசீந்திரம் செல்லலாம். அங்கு சுசீந்தரம் திருமூர்த்தி கோவிலில் தரிசனம் மேற்கொள்ளலாம். அங்கிருந்து மதுரை புறப்பட்டு, சாத்தூரில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்படும். மாலை 4 மணிக்கு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்யலாம். அன்றிரவு மதுரை ஓட்டல் தமிழ்நாட்டில் மதிய உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும்.
6ம் நாள் – கொடைக்கானல்
வியாழன் காலை 8.30 மணிக்கு காலை உணவை முடித்து கொடைக்கானல் புறப்படலாம். அங்கு மதியம் 1.30 மணிக்கு மதிய உணவை முடித்து Coaker’s Walk பகுதிக்குச் செல்லலாம். அங்கிருந்து ஷாப்பிங் முடித்துவிட்டு, மாலை 4.30 மணிக்கு பில்லர் ராக் மற்றும் பசுமை பள்ளத்தாக்கு, போட்டிங் ஆகிய இடங்களுக்குச் செல்லலாம். மாலை 8 மணிக்கு இரவு உணவு மற்றும் தங்குமிடம் கொடைக்கானல் ஓட்டல் தமிழ்நாட்டில் ஏற்பாடு செய்யப்படும்.
7ஆம் நாள் – ஸ்ரீரங்கம், திருச்சி
வெள்ளிக்கிழமை காலை உணவை முடித்துக்கொண்டு காலை 9.30 மணிக்கு கொடைக்கானல் சில்வர் அருவிக்கு செல்லலாம். அங்கிருந்து திருச்சி நோக்கி புறப்படலாம். மதிய உணவுக்கு பின் மதியம் 2 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்று, அடுத்து மலைக்கோட்டைக்குச் செல்லலாம். அன்றிரவு திருச்சி ஓட்டல் தமிழ்நாட்டில் தங்கலாம், இரவு உணவும் ஏற்பாடு செய்யப்படும்.
8ஆம் நாள் – சென்னை திரும்பலாம்
சனிக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு காலை உணவை முடித்துக்கொண்டு ஓட்டலில் இருந்து சென்னை நோக்கி புறப்படலாம். வரும் வழியில் மதியம் 1 மணிக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்படும். மாலை 6 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாகத்தில் சுற்றுப்பயணம் முடிவுக்கு வரும்.
கட்டணம் எவ்வளவு?
தமிழ்நாட்டின் சென்னையில் புறப்பட்டு பாண்டிச்சேரி, பிச்சாவரம், சிதம்பரம், திருக்கடையூர், நாகூர், வேளாங்கண்ணி, தஞ்சாவூர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, சுசீந்திரம், மதுரை, கொடைக்கானல், திருச்சி என பெரும்பாலான இடங்களுக்கு 8 நாள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது. இந்த சுற்றுலாவில் பேருந்து வசதி, உணவு வசதி, தங்குமிட வசதி, சுற்றுலா வழிகாட்டி உள்ளிட்டவை அடக்கம். இந்த சுற்றுலாவுக்கு பயணி ஒருவருக்கு ரூ.18 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் 8 நாள்கள் சுற்றுலா மேற்கொள்ளும் இந்த சுற்றுப்பயணத்தில் நீங்களும் இணைய விரும்பினால், www.ttdc.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவு செய்யலாம். 044-25333333, 044-25333857, 044-25333444 இந்த அலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் சந்தேகங்களை கேட்கலாம்.
1800 4253 1111 என்ற இலவச எண்ணும், support@ttdconline.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் தொடர்புகொள்ளலாம். சுற்றுலாவுக்கான தேதியை TTDC இறுதி செய்து உங்களிடம் தகவல் தெரிவிப்பார்கள். சென்னை வாலாஜா சாலையில், கலைவாணர் அரங்கத்திற்கு அருகில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளாகத்திற்கு நேரில் சென்று உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்யலாம்.