விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை பெருநகரில் 1,519 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் விநாயகர் சிலை, பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்றைய தினம் விநாயகர் சிலைகளை வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, விளாம்பழம் உள்ளிட்டவை படையலிட்டு வழிபடுவர். அத்துடன் விதவிதமான விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து, அந்தந்த பகுதி மக்கள் கூட்டாக வழிபடுவர்.
நாளை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, சென்னையில், விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும், வழிபாடுகள் செய்வதற்கும் பின்னர் அவற்றை நீர் நிலைகளில் கரைப்பதற்கும், மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தல்படியும், தீயணைப்புத் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியினரின் தடையில்லா சான்றுகளுடன் காவல்துறை அறிவித்த கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலைகளை நிறுவ கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை பெருநகரில் விநாயகர் சிலைகள் அமைப்பாளர்களுடன் உயரதிகாரிகள் உள்ளிட்ட சரக காவல் ஆய்வாளர்கள் வரை கலந்தாய்வு கூட்டம் நடத்தி, சென்னை பெருநகர காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு, அமைதியான முறையில் வழிபாடுகள் செய்யவும், பின்னர் காவல்துறை அறிவித்துள்ள நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கும், ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளதன் பேரில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் 1,519 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர் முழுவதும் 16,500 காவலர்கள், 1,500 ஊர்காவல்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்தும், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர காவல் ரோந்து வாகனங்கள் மூலம் அவ்வப்போது போலீசார் ரோந்து சுற்றி கண்காணித்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், 2 தன்னார்வலர்களை பாதுகாவலர்களாக நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் அமைதியான முறையில் வழிபாடுகள் செய்யவும், பொது இடங்களில் முறையான அனுமதியுடன் வைக்கப்பட உள்ள விநாயகர் சிலைகளை, காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து அமைதியான முறையில் வழிபாடுகள் செய்யவும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறும் சென்னை பெருநகர காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளனர்
மேலும், காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.