மதுரையில் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது, ”கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டில் விஜய்யின் பேச்சை மூத்த அரசியல் தலைவர்கள் விமர்சிக்கிறார்களே?” என்ற கேள்விக்கு, ”அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது? JUNGLE JUNGLE என்று தானே கத்த வேண்டும். கடந்த மாநாட்டில் ‘CM சாராக’ இருந்தவர், இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக மாறினார்?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய சீமான், ”மாநாடு என்றால் எப்படி நடத்த வேண்டும்? என்பதை அறிய அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி திருச்சியில் நாங்கள் நடத்தும் மாநாட்டை வந்து பாருங்கள். அதில் எத்தனை லட்சம் பேர் கூடுகிறார்கள்? என்பதை காணுங்கள். ஒரு மாநாட்டு உரை என்பது எப்படி இருக்கும்? என்பதை அப்போது நீங்கள் பார்ப்பீர்கள்” என கட்சியின் மாநாடு குறித்த அறிவிப்பை சீமான் வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர் ”தவெக மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்கள் சிலரது இறப்பு என்பது கட்சி சார்புடைய மரணமாக பார்க்க கூடாது. அது ஒரு மனித மரணம். வேதனைக்குரியது தான். அரசியல் கட்சித் தலைவர்களை பாதுகாப்பதற்கு பவுன்சர்கள் என்ற முறை எனக்கு தேவையில்லை. ஏனென்றால், நான் தான் இந்த நாட்டிற்கு பாதுகாப்பு. தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தங்களுக்கான பாதுகாப்பை கேட்டுப் பெறுகிறார்கள் என்றால், இங்குள்ள சாதாரண குடிகளின் நிலை எப்படி இருக்கும்? என்று நினைத்துப் பாருங்கள். இது போன்ற பாதுகாப்புகள் எல்லாம் ஓட்டு கேட்டு வரும் போது இருப்பதில்லை. பதவிக்கு வந்ததும் தான் இவர்களுக்கு தேவைப்படுகிறது” என்றார்.